பார்வைகள் பலவிதம்
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், "இந்தக்கடல் மாபெரும் திருடன்", என்று.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமான மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா...", என்று.
அதே கடலில் ஒருவன் நீந்தி சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கிறதே", என்று.
ஒரு வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், "இந்தக்கடல் ஒன்றே போதும், நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.!", என்று.
ஒரு மாபெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்து விட்டு சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே. இவ்வுலகை ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் பார்க்கிறார்கள். நீயும் தூய மனதோடு உலகைப் பார் அழகாக இருக்கும்.