அளவுடன் குடித்தால் மட்டுமே காபி-தேநீர் நல்லது
காபி, தேநீர் போன்ற பானங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளோடு நெருங்கி நிற்கும் துணையாக வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது அதன் மீது மக்கள் கொண்டுள்ள தீராத காதலும் அதனை அருந்துவோரின் எண்ணிக்கையும் எத்தனைக் காலங்கள் கடந்தாலும் குறையாது என்பதை கடைகளில் அலைமோதும் கூட்டமே சாட்சியாக அமைந்து விடுகிறது.
மகிழ்ச்சியைச் சேர்த்து சோகத்தைக் தொலைக்கும் தருணங்களில் மனிதன் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி தேநீரைத் தேடுவது வழக்கம் என்பதை மறுக்க முடியாது. எதுவும் அளவோடு இருப்பதே உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லலாம்.
காபி காபி கொட்டைகளின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது (கொட்டை), தேநீர் தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டும் காஃபின் கொண்டவை, ஆனால் வேறுபட்ட சுவை மற்றும் நன்மைகளைக் கொண்டுள்ளன இந்த இரண்டு பானங்களும் புத்துணர்ச்சி தரும் பானங்களாகும்.அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப் பொருட்கள் இருப்பதால் அப்பானங்களை அருந்தியதும் நாம் உற்சாகமாக உணர்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு முறை தேநீரோ அல்லது காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் தீங்கு விளைவிக்காது.அதுவே எல்லை மீறினால் அந்த அமிர்தம் நாளடைவில் நஞ்சாக மாறிவிடும் என்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.
அதிக அளவில் காபி-டீ அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்துவதோடு உடல் வியர்த்தல், கை கால் நடுக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், தினசரி காபி-டீ குடிப்பவர்கள் அதன் அளவை ஒரு கப்பாகக் குறைத்து பின்னர் அந்த ஒரு கப்பையும் நண்பர்களுடன் பகிர்ந்து குடிப்பதன் மூலம் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதை சுலபமாக தவிர்க்கலாம் என்கிறார் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.
சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி, போதிய அளவு நீர், குறைந்த அளவு உப்பு மற்றும் இனிப்பு ஆகியவற்றுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையே புத்துணர்விற்கான சிறந்த வழி என்பதால் அவ்விரு பானங்களையும் முடிந்த வரையில் தவிர்ப்பதே விவேகமானது என்றும் டாக்டர் ரிஷா ஆலோசனை கூறினார்.