- · 0 friends
பெற்ற மனம்
வறுமை காரணமாய்
பெற்ற பிள்ளைதனை
வசதியாய் வாழும் பிள்ளையில்லா தமக்கைக்கு
சாகும் வரை ரகசியம் காப்பதாய்
பால்குடி மறக்கும் முன்பே சத்தியம் செய்து
தத்துக் கொடுத்தாள் தங்கை
பசியில்லா வயிறும்
படிப்பும் அறிவும்
பிள்ளைக்கு கிடைத்தால் போதுமென்று
ஊரை விட்டே புலம்பெயர்ந்தாள்
ஆண்டுகள் உருண்டோடியது.
மண்வாசனை மனதோடு ஏக்கம் ஏற்படுத்த
கோயில் திருவிழா சாக்கானது
காலத்தின் பெருங்காற்றில்
அடையாளம் தெரியாமல் மாறிப்போனவள்
திருவிழாக்கூட்டத்தின் பரபரப்பினூடே
ஓரமாய் நின்று கடந்தகாலத்து பல்சக்கரத்தின் பிடியில் வலிய தன்னை செருகிக்கொண்டாள்
வாடிவாசல் திறந்ததும் சீரும் காளையென
கூட்டத்தை கிழித்துக்கொண்டு
எத்தனை முயன்றாலும் மறைக்க இயலா தன் சாயலோடு
வந்த
இளைஞனை பார்த்ததும்
உடல் குலுங்க நடப்பிற்கு வந்தாள்
இரு புருவத்தின் நடுவிலும் தன்னைப்போலவே
சின்னதாய் ஒரு வெட்டு
அப்பனைப்போலவே லேசாய் செம்பட்டை படிந்த தலைமுடி
முரட்டுகைகளின் ரோமங்கள் கூட அப்பனை உரித்தாற் போன்று
தன்னை நோக்கி ஏன் வேகமாய் வருகிறான்?
படபடத்துக்கொண்டாள்
வியர்த்துப் போனது ஒரு நொடியில்
தெரிந்து போனதா நான் தான் அம்மா என்று?
அம்மா என்று அழைக்கும் போது என்ன எதிர்வினை ஆற்றுவது?
செய்த சத்தியம் என்னவாகும்?
எதற்காய் பாழாய் போன திருவிழாவிற்கு வந்தேனோ?
மனம் அடுக்கடுக்காய் கேட்டுக்கொண்டது
நினைத்தது போலவே
பெருங்குரலெடுத்து
‘அம்மா’ அம்மா எனக் கத்தினான்
எந்த விளிக்காய் இத்தனை இரவுகள் தூங்காமல் தவித்தாளோ
இப்போது அது செவிப்பறையில் வந்து மோதுகிறது
எனைப்பெத்தாரே!
என்குலசாமி என உரக்கக் குரலெடுத்து அழுது ஆரத் தழுவ எத்தனிக்கையில்
“அம்மா… கூட்டம் அதிகமா இருக்கு…அங்கேயே இரு
நான் வரேன்" என எங்கோ எட்டி வந்த தன் அக்காவைப்பார்த்து அவன் சொன்ன நொடியில்
தத்து கொடுத்த நாளைவிடவும்
ஏகமாய் நொறுங்கிப்போனாள்
-- சியாமளா ரமேஷ்பாபு