
வட்டி
சொன்ன மாதிரி சரியாக ஐந்தாம் தேதி வந்து நின்றாள் மைதிலி.
“இந்தாங்க மாலதி.. முதல் மாச வட்டிப் பணம்…’
அவள் கொடுத்த பணத்தை கணவன்.
எதிரில் பீரோவில் வைத்துப் பூட்டினாள் மாலதி.
கணவன் பிரகாஷ், மாலதி இருவருக்கும் அரசாங்க உத்யோகம். கைநிறைய சம்பளம். குழந்தைகள் இல்லை. வங்கியில் எக்கச்சக்க கையிருப்பு.
பக்கத்து வீட்டு மைதிலியின் கணவருக்கோ, தனியார் நிறுவனத்தில் வேலை. மைதிலி ஹவுஸ் வொய்ஃப். கான்வென்டில் படிக்கும் இரண்டு குழந்தைகள் வேறு.
ஸ்கூல் ஃபீஸ், இதர செலவு என்று ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக, மாதம் ஆயிரத்து ஐநூறு வட்டிக்கு, மாலதியின் கணவரிடம் வாங்கிப் போனாள்.
அதற்கான வட்டிப் பணத்தைத்தான் இப்போது கொடுத்துவிட்டு போகிறாள்.
கணவன் ஆபீஸுக்கு கிளம்பியதும், மைதிலியின் வீட்டுக்கு விரைந்தாள் மாலதி.
“மைதிலி… என்னை மன்னிச்சுடு… குழந்தை பாக்கியத்தைக் கொடுக்காத கடவுள், என் கணவருக்கு பணத்தாசையை மட்டும் நிறைய கொடுத்திருக்கார். ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு பற்றாக்குறை பட்ஜெட்ல நீ பட்ற கஷ்டம் எனக்குத் தெரியும். இந்தா. ஆயிரம் ரூபாய். ஐநூறு ரூபாய்மட்டும் வச்சிக்கிறேன். பாங்க்ல ஐம்பதாயிரம் போட்டா,அவ்வளவுதான் வட்டி கிடைக்கும். அதுபோதும்… மாசா மாசம் இப்படியே கொண்டு வந்து கொடுத்துடறேன். என் கணவருக்குத் தெரிய வேண்டாம்’ என்று கிளம்பினாள் மாலதி.
அவள் சென்ற திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் மைதிலி.