·   ·  244 posts
  •  ·  0 friends

சாக்ரடீசின் இறுதிக் காலம்

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,

“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.

சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.

அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன்

கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ்

“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.

சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.

விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.

சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின!

தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.

  • 1023
  • More
Comments (0)
Login or Join to comment.