·   ·  448 posts
  •  ·  0 friends

ததும்பாத நிறைகுடம்

ஒருவர் செய்த சமூக சேவைக்காக, அவர் இறந்த பிறகு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் வேறில்லை. இருக்கும்போது கொடுத்திருந்தால் அவர் ஏற்றிருக்கமாட்டார் என்பதுதான்.பெருமிதத்துக்குரிய இந்த அறிமுகத்துக்குச் சொந்தக்காரர், சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்பிரமணியம். கடந்த டிச.,11 அன்று அவர் மறைந்த பின்புதான், அவர் செய்த சமூகசேவை, ஊர், உலகமெல்லாம் பேசப்பட்டது.

பொறியியல் தொழில்நுட்பத்தில் கோவைவாசிகள், விற்பன்னர்கள் என்றால் சுப்பிரமணியம் வித்தகர். பி.எஸ்.ஜி.,தொழில் நுட்பக் கல்லுாரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே, சிறிய அளவில் லேத் அமைத்து, படிப்படியாக முன்னேறி, சாந்தி கியர்ஸ் என்ற கியர் நிறுவனத்தை உருவாக்கி, உலகின் முதல் தரமான கியர் நிறுவனமாக உச்சம் தொட வைத்தவர். கோவையின் 'கியர்மேன்' என்று தொழிலாளர்களால் கொண்டாடப்பட்டவர்.

பல கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த நிலையில், தனக்குக் கிடைத்த செல்வத்தை பகிர்ந்து வாழ நினைத்து சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சுப்ரமணியம்.சாந்தி கியர்ஸ் பங்க்கில் பெட்ரோல், டீசல் போட்டால், வண்டிக்கு எந்தப் பிரச்சினையும் வராது; ஒரு துளி அளவு குறையாது என்பது கோவை மக்களின் நம்பிக்கை மட்டுமில்லை; என்றும் மாறாத உண்மை.பத்து ரூபாய் இருந்தால் காலையில் பசியாறிவிடலாம்.

ஒரு ரூபாய்தான் ஒரு இட்லி.மதியம் வயிற்றையும் மனதையும் நிறைக்கும் சாப்பாடு, வெறும் 18 ரூபாய்தான். ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்தபோது, எல்லோரும் விலையை ஏற்றியபோது, அந்த வரியையும் தன் பங்கில் ஏற்று, சாப்பாட்டின் விலையைக் குறைத்தவர்.வாங்கிச் சாப்பிடும் வசதியே இல்லாதவர்கள் பல நுாறு பேருக்கும் தினமும் இரண்டு வேளை அன்னமிட்ட அண்ணல்.

அதிகாலையில் சாய்பாபா காலனியில் மகனிடம் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து பஸ் ஏறி, சாந்தி கியர்ஸ் வந்து, காலையும், மதியமும் இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, இரவில் தங்குவதற்கு மட்டும் வீட்டுக்குப் போகும் ஒரு மூதாட்டி அவர். கடந்த ஆண்டில் சுப்பிரமணியம் இறந்தபோது, அவர் கதறிய கதறல் தான், சுப்பிரமணியம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம்.

மருந்துகளுக்கு 20 சதவீதம் சலுகை, மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் ஸ்கேன், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா என்று வெளியுலகிற்குத் தெரிந்து, அவர் செய்த சேவைகளை விட, பறவைகளுக்கான பழத்தோட்டம், கிராமங்களுக்கு தரமான தார்ச்சாலை என்று யாருமறியாத சேவைகளின் பட்டியல் வெகுநீளம். அதனால் சுப்ரமணியத்துக்கு விருது கொடுத்ததை கொண்டாடுகிறது கோவை.

பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியம் போன்ற மாமனிதர்களுக்குத் தரப்படுவதன் மூலமாக, பத்மஸ்ரீ விருது மேலும் கௌரவம் பெற்றிருக்கிறது.இப்போதும் கூட இந்த விருதை அவரது குடும்பத்தினர் வாங்கியிருந்தாலும் அதைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை சொல்லவும் தயாராக இல்லை. சாந்தி கியர்ஸ் குடும்பம்...என்றைக்கும் ததும்பாத நிறைகுடம்...

யார், யாரையோ பார்த்து பின்பற்றும் அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து பின்பற்றலாமே-?!!

  • 140
  • More
Comments (0)
Login or Join to comment.