
ஆதிசேஷன் நாகையில் சிவபூஜை செய்து பேறு பெறுதல்
மஹா_சிவராத்திரி காலத்தில் ஆதிசேஷன் நாகையில் சிவபூஜை செய்து பேறு பெறுதல்..!!
குழந்தைப்பேறு இல்லாது தவித்த ஆதிசேஷன், ஓர் முனிவரின் அறிவுறுத்தலின்படி மகா சிவராத்திரி நன்னாளில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய எண்ணினான். அதன்படி முதல் காலத்தில் கும்பகோணம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகநாதசுவாமி திருக்கோவிலிலும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரதிலும், மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் திருத்தலத்திலும், நிறைவாக நான்காம் காலத்தில் நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமியை வழிபட்டு பின் தனியாக லிங்கப் பிரதிஷ்டை, தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார்.
இறைவனும் மனமிரங்கி ஆதிசேஷனுக்கு காட்சியளித்து பிள்ளை வரமளித்தார். நாகர்களின் குலம் செழிக்க காரணமான இந்த ஊருக்கு அவர்களது பெயராலே வழங்கலாயிற்று. இறைவன் அருளால் ஆதிஷேசன் ஓர் பெண் குழந்தையை பெற்றார். ஆனால், அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்திய போது, மூன்று தனங்களுடன் இருப்பதை அறிந்து மனவேதனை கொண்டு இறைவனிடம் முறையிட்டான். அப்போது அசரீரியாக, "ஆதிசேஷனே வருந்தாதே.. அப்பெண்ணிற்கு உரிய மணாளனே அவள் காணும் பொழுது மூன்றாவது ஸ்தனம் மறையும்" என ஒலித்தது.
ஆதிசேஷனின் மகளான நாக_கன்னிகை, காயாரோகண சுவாமியையும், நீலாயதாட்சி அம்மனையும் நாள்தோறும் வழிபட்டு வந்தாள். அவ்வேளையில் ஒரு நாள் தேவ தீர்த்தக்கரையில் சோழர் குலத்தில் உதித்த அரசகுமாரன் சாலிசுகனை கண்டபோது அவள் மூன்றாவது ஸ்தனம் மறையவே, இவனே தனது மணாளன் என உணர்ந்து தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். பிலாத்துவாரம் வழியாக நாகலோகம் அடைந்த சாலிசுகனை, ஆதிசேஷன் வரவேற்று தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தான் என்பது தலபுராணம்.
அமைவிடம்: காயாரோகணேசுவரர் கோவில், நாகப்பட்டிணம்.