- · 0 friends
இதுதாங்க எம்.ஜி.ஆர். குணம்
முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் ஒரு சமயம் கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவருக்கு எங்காவது ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. வழியில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இன்ஸ்பெக்ஷன் பங்ளாவுக்குள் கார் நுழைந்தது.
முதல்வரின் காரைக்கண்டதும் ஓடோடி வந்த உதவிப் பொறியாளர் ஏ.சி. அறை மற்றும் குளியலறைகளை தயார் செய்தார்.
எம் ஜி ஆர் அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் நேரே பாத்ரூமுக்குத்தான் சென்றார். அங்கு ரெண்டு பெரிய பக்கெட்டுகள் நிறைய தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளியே வந்ததும் உதவிப்பொறியாளரைப் பார்த்து,
"குழாயில் ஏன் தண்ணீர் வரவில்லை?"
என்று கேட்க
அவர், "மோட்டார் ரிப்பேர் சார்!" என்க,
"ஏன் ரிப்பேர் செய்யவில்லை?" என்று விடாமல் வினவ,
"கோவையிலிருந்து மெக்கானிக் வரவேண்டும்."
-என்று உடம்பெல்லாம் பதற பதிலளித்தவர்...
கடைசியாக அவர் சொன்னதுதான் ஹைலைட், முதலமைச்சரிடமே,
"சார்! சார்! எங்க டி.இ.கிட்ட சொல்லிடாதீங்க சார்!" என்றார்.
எம் ஜி ஆர் அவர்கள் குபுக்கென்று சிரித்துவிட்டு அவரிடம் அவரது குடும்பம், பிள்ளைகள் படிப்பு எல்லாம் அக்கறையாக விசாரித்துவிட்டு, வழக்கம்போல் சட்டைப்பையிலிருந்து வந்த பணத்தையும் கொடுத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
பொறியாளர் நெகிழ்ந்து நின்றார். வெளியில் வந்து காரில் ஏறப்போகும் போது திரும்பி பொறியாளரைப் பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே,
"அடுத்த முறை வரும் போது குழாயில் தண்ணீர் வர வேண்டும்! இல்லாவிட்டால் உங்க டி.இ. கிட்ட சொல்லிடுவேன்!!" என்றாரே பார்க்கலாம்!!