·   ·  1068 posts
  •  ·  0 friends

சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்

தெய்வத் திருவிளையாடல்கள் எல்லா காலமும் நிகழத்தான் செய்திருக்கின்றன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வீற்றிருக்கும் கைக்கொண்ட ஐயனார், ஆங்கிலேய ஆட்சியின்போது, அதிகாரி ஒருவருடன் உரையாற்றியுள்ளார். அத்தகைய சிறப்புபெற்ற இந்த ஐய்யனார் சாந்த ரூபத்தில் சாஸ்தாவாகவும், ஆங்கார ரூபத்தில் ஐயனராகவும் இருந்து வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்து வருகிறார். கைக்கொண்ட ஐயனார் கோயிலின் இடது பக்கம் ஒரு பெரிய குளம் உள்ளது. முற்காலத்தில் அந்தக் குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருக்கும். அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஆகாரத்திற்கான பாசனத்திற்கு இந்த குளத்து நீரே ஆதாரம்.

அந்தளவுக்கு கொள்ளளவு கொண்டு, ஒரு சிறிய ஏரி போல் காட்சி தரும் அந்தக் குளத்தின் நடுவே இருந்த திரட்டு மீது அமர்ந்திருந்தார் ஐயனார். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் குளக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த பெரிய திருமலை வேளாளரை பார்த்து, பெயரைக் கூறி சுவாமி அழைத்தார். திரும்பிய வேளாளர், ‘‘ஐயா, என்ன காரணமாக என்னை கூப்டீக, நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ “ ஒ! தெரிஞ்சுக்கலாமே, முதல்ல எனக்கு பசியா இருக்கு. சாப்பிட உன்கிட்ட என்ன இருக்கு.?” “ஐயா, இப்ப, என்கிட்ட ஒண்ணும் இல்லீங்கள’’ “தோட்டத்தில் இருந்து தானே வற” “கொஞ்சம் பொறுத்திருங்க, வாழைப்பழம் கொண்டு வாரேன்’’ ‘‘நான் குளத்துக்கு நடுவில் இருக்கும் திட்டில் அமர்ந்திருப்பேன். நீ வந்து அழைக்கும்போது நான் வருவேன்’’ என்று கூறிக்கொண்டு ஐயனார் சென்று விட்டார்.

அருகிலிருக்கும் வாழைத்தோட்டம் சென்று ஒரு வாழைப்பழத்தாருடன் குளத்தின் கரைக்கு வந்த வேளாளர். கரையிலிருந்து ஐயனாரை அழைத்தார். அவரின் குரலைக் கேட்ட பின், ஐயனார் பேசினார். ‘‘வேளாளரே, நீர் கொண்டு வந்துள்ள குல வாழையை, குளத்து தண்ணீர் மேல தலைவாழை இலை விரித்து, அதன் மேல் வைத்துவிடு, அது என்னிடம் வந்திடும். நான் எடுத்துக் கொள்கிறேன்.’’ “ஐயனே, அது எப்படி சாத்தியமாகும். பழ குலை தண்ணீரில் மூழ்கிடுமே.’’ “ம்..ம்.. நான், சொன்னதை நீர் செய்யும். அது மூழ்காது..” என்றார் சுவாமி. சுவாமி சொன்னபடி செய்தார் வேளாளர். தலைவாழை இலையில் வைக்கப்பட்ட குலை வாழைப்பழம், மறுவினாடியே மிதந்தபடி, குளத்தின் மையத்தில் உள்ள திரட்டுக்கு சென்றடைகிறது.

அதைக் கைக்கொண்டு சுவாமி பெறுகிறார். அடுத்த நொடி அதே இலை, மீதி பழங்களுடன் திரும்பி வந்தது. அதைப்பார்த்த அவர், “சுவாமி என்ன இது’’ ‘‘நான் பழம் பெற்று கொண்டதை நீ அறிய வேண்டாமா, அது தான் திரும்ப மீதியை அனுப்பினேன்’’ என்றார். “ஐயா, தினமும் நான் கொண்டு வாரேன். வந்து எப்படி அழைப்பது.’’ “ நீ எப்படி அழைத்தாலும் நான் வருவேன்” என்றார். “நான் அனுப்பியதை, நீங்கள் கைக்கொண்டு பெற்றமையால் கைக்கொண்ட ஐயன் என்றே நான் அழைக்கிறேன்’’ என்று அவர் கூறினார். “சரி” என்றார் சுவாமி, மறுநாள் வீட்டிலிருந்து அப்பளம், பாயசத்துடன் உணவு கொண்டு வந்த அவர், அதை இலையில் வைத்து அனுப்பினார். சுவாமி கேட்டார். “என்ன வேளாளரே, உணவோடு வந்திருக்கிறீரே” என்று கேட்டதும்.

“அறுவடை முடிஞ்ச, புதுநெல்ல குத்தி சோறாக்கினோம். முதல்நாள் என்பதால் பாயசம், அப்பளமாக உணவு சமைத்தோம்’’ என்றார். “இது எனக்கு வேண்டாம், பழம் மட்டுமே போதும்.” “ஏன் சுவாமி, உணவை சாப்பிடுவதில்லையா’’ “ம்ம்.. சாப்பிடுவேன் அது என் முன்னால் பொங்கலிட்டு படைத்தால் அதை நான் ஏற்பேன். எனக்கு படையல் செய்ய, நீ உன் குடும்ப சகிதமாக வரவேண்டும். எனக்கு படையல் செய்து பூஜித்த பின்னர். நீங்கள் அனைவரும் என் முன்னே அமர்ந்து சாப்பிட வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் கூடி மகிழ்ந்து செய்யும் போது அந்த பூஜையை நான் விரும்பி ஏற்பேன்.’’ என்றார். “சரி. சுவாமி குளத்துல தண்ணி நிரம்பி இருக்கு, எப்படி அங்கு வந்து பொங்கலிடுவது.”

“குளத்தின் கரையில் வைத்து பொங்கலிட்டு, படையலை இலையில் வைத்து அனுப்பு, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.” “சரி, எப்ப செய்யனும்.’’ “உனக்கு என்னிக்கு முடியுதோ அன்னிக்கு செய். நான் அவதரித்த தினமான பங்குனி உத்திரத்தன்று, என்னை வழிபடும் அன்பர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். என்று எண்ணுகிறேன். முடிந்தால் அன்றைய தினம் செய்துக்கொள்.” என்றார். அதன்படி வேளாளரும் செய்து வந்தார். நாட்கள் நகர்ந்தது, முதுமை கொண்ட பெரிய திருமலை வேளாளர், ஒரு பங்குனி உத்திரத்தன்று பூஜை முடிந்த பின், சுவாமியை நோக்கி சத்தமாக குரல் கொடுத்தார். “ஐயனே, இப்படி இலையில் வைத்து அனுப்புவது என்னால் முடிந்தது. என் சந்ததியினர் இப்படி செய்ய முடியுமா? என்று தெரியவில்லை.

அதை விட, உனக்கு பூஜைகள் செய்து முழுமையான உமது தரிசனத்தை காண நாங்கள் விரும்புகிறோம். ஐயனே நீர் குளக்கரையில் வந்து அமர வேண்டும்’’ என்றார். “உன் விருப்பப்படியே நடக்கும்.” என்றார். இது நடந்த, மறு பங்குனி உத்திரத்தன்று குளக்கரையில் வந்து பூஜைசெய்ய முயன்ற பெரிய திருமலை வேளாளரிடம், அசரீரியாக ஐயன் பேசினார். “வேளாளரே குளத்தின் வட கரையில் ஆலமரத்தின் கிழக்கேயுள்ள வாகை மரத்தடியில் எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா, என்னோடு வந்தமரும், என் சக பரிவாரர்களுக்கும் நிலையம் அமைத்துக் கொடுத்து பூஜை செய். என்னை வழிபடும் அன்பர்களுக்கும், அவர்களின் பிள்ளைக்கும், பிள்ளைக்குமான தலைமுறைக்கும் நான் துணை நிற்பேன்.

என் சக பரிவாரர்களும், என் தளபதியர்களான மாடன்களும் துணை நிற்பார்கள்” என்று கூறினார். காலங்கள் உருண்டோடியது. ஆலயம் வளர்ந்தோங்கியது. மேலப்பாவூர், மேலகிராமம் சுப்ரமணிய ஐயர் ஆலயத்தை நிர்வகித்து வந்தார். திப்பணம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு கைக்கொண்ட ஐயனார், குல தெய்வமாக திகழ்ந்தார். மாதம் தோறும் கடைசி வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. பங்குனி உத்திரம் நாளில் அபிஷேகத்துடன் பூஜைகள் நடந்தது. கீழப்பாவூரிலிருந்து வேட்டைக்காரன் சுடலை, கைக்கொண்ட ஐயனார் ஸ்தலத்துக்கு வந்தமர்ந்தார்.

ஒரு வெள்ளிக்கிழமை கோயில் நிர்வாகியான ஐயரின் கனவில் வந்த ஐயனார், என் தளபதி சுடலைமாடனும், என் தாயின் அம்சமான பிரம்மராக்கு சக்தி, பேச்சியம்மன் மற்றும் என் பரிவார மூர்த்திகள் வேட்டைக்காரன், கோட்டைவாசல் கருப்பசாமி ஆகியோர் வந்திருப்பதாகவும், அவர்களுக்கு எனது சந்நதி முன்பு நிலையம் கொடுத்து பூஜித்து வாருங்கள். என்றும் கூறினார். அதன்பிறகு அவர்களுக்கு அங்கு நிலையம் அமைத்து கொடுத்து பூஜைகள் நடைபெற்று வந்தது. பூஜையின்போது சுடலைமாடன் ஒருவர் மீது வந்திறங்கி, எனக்கும், ஐயனாருக்கும் வாகனமான குதிரையை உருவம் கொடுத்து என் சந்நதி முன்னே நிறுத்த வேண்டும். பங்குனி உத்திரத்தன்று எனக்கு கொடைவிழா கொடுக்க வேண்டும்.

என்று கூறியதன் பேரில், ஐயனாருக்கு சைவ பூஜையும், சுடலைமாடன் மற்றும் பரிவார மூர்த்திக்களுக்கு அசைவ பூஜையும் நடைபெற்று வந்தது. கோயிலில் சுடலைமாடன் வடக்கு பார்த்து உள்ளார். முற்காலத்தில் அவர் முன்னே மண்ணால் குதிரை பொம்மை செய்து வைத்திருந்தனர். 1902ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருநெல்வேலி-தென்காசி இடையே ரயில் போக்குவரத்தை தொடங்க, இருப்பு பாதை அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு நடந்தது. அந்த இருப்பு பாதை கைக்கொண்டார் குளத்தின் கிழக்கு கரையோரமாக தற்போது கோயிலிருக்கும் பகுதி வழியாக அமைக்க முடிவு செய்து, முன்னேற்பாடான பணிகள் தொடங்கியது.

அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம், கோயில் நிர்வாகியான சுப்பிரமணிய ஐயர் மற்றும் இதர நிர்வாகிகளும் சேர்ந்து இருப்பு பாதையை இந்த வழியாக அமைத்தால் கோயிலுக்கு இடையூறாக இருக்குமே என்றனர். அதற்கு அந்த அதிகாரி, இடையூறா, கோயிலையே, அதிகாரிங்க இடிக்க முடிவு பண்ணியிருக்காங்க என்றனர். அதை கேட்டதும், நிர்வாகக் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளா யினர். இதை உடனே தடுத்தாக வேண்டும். என்ன செய்வது என்று அவரிடமே கேட்கும்போது, அந்த அதிகாரி கூறினார். ‘‘நீங்க தென்காசியில் இருக்கும் இன்ஜினீயர் ஆபீசில போய் சொல்லுங்க’’ என்றதும். கோயில் நிர்வாகத்தினர் அங்கு சென்று கூறினர்.

அதற்கு அவர், ‘‘நாங்கள் அங்கு வந்து பார்த்த பிறகு முடிவு செய்கிறோம்’’ என்று கூறி அனுப்பி வைத்தனர். மறுநாள் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு கோயில் இருக்கும் இடத்திற்கு, ஆங்கிலேயர்களான ரயில்வே உயர் அதிகாரியும், இன்ஜினீயரும் அவர்களோடு இரண்டு இந்தியர்களும் வந்திருந்தனர். ஆங்கியலேய அதிகாரி தனது குதிரையில் வந்து இறங்கினார். கோயில் பூசாரி முதல் அய்யர் உட்பட நிர்வாகத்தினர் மரியாதையுடன் அவர்களை வரவேற்றனர். உடன் வந்த ஒருவர் பேசத் துவங்கினார்.. ‘‘துரை உக்கார முக்காலி எடுத்து வை’’. “சீட்டெல்லாம் வேண்டாம்... ம்ம்.. இந்த டென் டூ டென் சுமால் டெம்பிள்க்காக லேக்ஸ் செலவில நடக்கிற ரெயில்வே ஒர்க்க மாத்த சொல்ற, உன் டெம்பிள்... ஓ..கோயில் கோயில்.. உங்க கோயிலையே அங்க கொண்டு வை’’ என்றபடி கையை நீட்டுகிறார். அந்த வெள்ளக்கார துரை.

கோயில் நிர்வாகி, ‘‘ஐயா சாமியே, நான் இங்குதான் இருக்கிறேன்னு சொன்னதால, அங்க கோயில் கட்டியிருக்கிறோம்’’ என்று பதிலுரைத்தார். “என்னது சாமி பேசுச்சா, ஏன் மேன் பொய் சொல்ற, அப்படின்னா, உங்க சாமிய எங்கிட்ட பேசச்சொல்லு, ரெயில் லைனையே மாத்திடுறேன்.’’ “துரை, நீங்க கைக்கொண்ட ஐயனாரேன்னு கூப்பிடுங்கோ சாமி பதில் பேசுவார்.” என்று நிர்வாகி கூறியதன் பின்னர், ஆங்கிலேய அதிகாரி சுவாமியின் பெயரைக்கூறி அழைக்கிறார். சுவாமி பதிலுக்கு பேசுகிறார். இருப்பினும் நம்பிக்கை குறைந்த அந்த அதிகாரி, “ஏ... மேன், கோயில், இன்சைடு இருந்து, யாரோ மிமிக்ரி பண்ணுது.’’ உணர்ச்சி பொங்க கூடியிருந்தவர்கள் சேர்ந்தே கூறினர் “இல்ல, துரை எங்க சாமி ஐயனார்தான் பேசினார்” என்றனர்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, சுடலைமாட சுவாமியின் சந்நதிமுன் வைக்கப்பட்டிருந்த மண்ணால் செய்யப்பட்ட குதிரை உருவத்தை பார்த்து, ஆங்கிலேய அதிகாரி... “வாட்டிஸ் திஸ்? என்ன மேன் இது... ஓ..ஹார்ஸ் டால், குதிரை பொம்மையா, வாவ்.. இந்த பொம்ம குதிரை, புல்லை திண்ணுமா, அப்படி திண்ணுட்டா, உங்கே சாமி பேசினத நான் நம்புறேன்’’ என்று கூறியபடி திரும்பிப் பார்க்க, அவருடன் வந்த ஒருவர் புல்லை எடுத்து வந்து பொம்மை குதிரை முன்னே போடுகிறார். சுடலைமாடசுவாமி முன் நின்ற அந்த பொம்மை குதிரை புல்லை தின்றது. மறு விநாடி, ஆங்கிலேய துரை வந்த அரபுக்குதிரை மாண்டது.

“ஓ...காட்,...... யுவர் காட் இஸ் கிரேட், ப்ளீஸ் காட், மை ஹார்ஸ்.... கடவுளே, என்னுடைய குதிரையை காப்பாத்து.’’ கத்தினார், கதறினார், சுவாமியின் சக்தியை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரி அந்த இடத்திலேயே கட்டளை இட்டார். கோயிலில் இருந்து அரை கிலோமீட்டருக்கு அப்பால் இருப்புப் பாதையை அமைக்க வேண்டுமென்று. இந்த ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகாவிற்குட்பட்ட பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது. கோயிலின் தெற்கே அரியபுரம், வடக்கே மயிலப்புரம், கிழக்கே ஆவுடையானூர், மேற்கே குற்றால திரிகூடமலை சூழ்ந்திருக்க, பொதிகை தென்றல் வீசும், கானகத்தில் வீற்றிருக்கிறார் கைக்கொண்ட ஐயனார்.

பரிவார தெய்வங்களாக பிரம்மசக்தி, பாதாள பைரவி, பேச்சியம்மன், பச்சமாடன், மேலவாசல் காக்கும் பெருமாள், சிவனினைந்த பெருமாள், அகஸ்தியர், பூதத்தார், தவசி தம்புரான், சுடலைமாடன் 3 இடங்களில் நிலையம் பெற்றுள்ளார். வேட்டைக்காரன், இருளப்பன், முப்புலி மாடன், புலமாடத்தி, புலமாடன், கருப்பசாமி, சங்கலி பூதத்தார் ஆழி ரூபமாக, பெரிய ரூபத்தில் நிற்கிறார். கோட்டை வாசல் கருப்பசாமி, திம்மக்கா, பொம்மக்காவுடன் பட்டவராயன், சுடலைபேச்சி, வனப்பேச்சி, இச்சியம்மன், காளக்கருப்பு, சின்னதம்பி ஆகிய தெய்வங்கள் உள்ளது.

சிவனும், சக்தியும் லிங்க ரூபம் இல்லாமல் இருந்த கோலத்தில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் தனி சந்நதியில் நின்ற கோலத்தில் உள்ளார். ஐயனாரும், சுடலைமாடனும் தனித்தனி குதிரையில் வேட்டைக்கு போவதுபோல் வில், அம்புடன் இருக்கும் சுதை சிற்பமும் உள்ளது. மூலவர் சந்நதிக்கு பின் விநாயகரும், நாகரும் தனிதனி சந்நதியில் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலுக்கு செல்ல பாவூர்சத்திரத்திலிருந்து மினி பஸ், ஆட்டோ இயங்குகிறது. ஆலயத் தொடர்புக்கு 9789383682

  • 27
  • More
Comments (0)
Login or Join to comment.