·   ·  780 posts
  •  ·  0 friends

பக்தன் கேட்ட கேள்வி; பகவான் செய்த உபதேசம்

ஒரு நாள் ஒரு படித்த இளைஞன் ஒருவன் பகவான் தரிசனத்திற்கு வந்தான்.

வந்தவன் சோபாவின் அருகே சென்று பகவானைப் பணிந்து விட்டு எதிரே உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் பகவானிடம் ஏதோ கேள்விகள் கேட்க வந்தவன் போல் தோன்றியது.

ஹாலில் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த மௌனத்தைக் கலைத்து எழுந்தது இளைஞனின் கேள்வி.

"சுவாமி, ராமகிருஷ்ண பரஹம்சர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகற்ப சமாதியில் நிலைப்பெறச் செய்தாரே! அதுபோல் பகவானும் என்னை நிர்விகற்ப சமாதியில் நிலைபெறச் செய்ய முடியுமா? என்று கேட்டான்.

பகவான் பதிலேதும் கூறவில்லை.

இளைஞனோ தன் கேள்விக்கு விடையை ஆவலுடன் எதிர்நோக்கினான்.

சிறிது நேரத்திற்குப் பின் பகவான் அந்த இளைஞனைப் பார்த்து,

கேட்பது விவேகானந்தர் தானோ!" என்றார்.

அவ்வளவு தான் அவன் பதிலேதும் கூற முடியாமல் மௌனியானான்.

தன் கேள்வியே தனக்குத் தோல்வியாக முடிந்ததை உணர்ந்து சிறிது நேரத்தில் எழுந்து போய்விட்டான்.

அந்த இளைஞன் எழுந்து வெளியே சென்ற பிறகு பகவான் அதைப்பற்றித் தொடர்ந்தார்.

"யாருக்கும் தன் நிலையைப் பற்றிக் கவலையேயில்லை.

தான் எல்லம் உணர்ந்த பூரணன் என்பதுதான் அவர்களின் முடிவு.

காரணம், தன்னைப்பற்றிய விசாரத்தில் மனம் சொல்லாததேயாகும்.

மேலும், தன்னைப்பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக மனம் பிறரை ஆராயத் தொடங்குகிறது.

இந்த ஆராய்ச்சி தான் சகல அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் இடம் அளிக்கிறது.

இந்தச் சாமியார் சோபாவில் உட்கார்ந்திருக்கிறாரே!

இவரைச் சுற்றியும் நிறைய பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே!

இவர் பெருமை தான் என்ன?

நான் கேட்பதைச் செய்து காட்டுவாரா பார்க்கலாம்!" என்பதே அந்த இளைஞனின் நோக்கம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் போன்ற சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறதா என்பதை அறிய முற்பட்டானேயன்றி,

கேட்கும் தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஏனென்றால், தன்னிடம் எல்லாத் தகுதியும் இருப்பதாக நினைப்பு.

அதில் சந்தேகமிருந்தால் தானே அதைப்பற்றி விசாரணை எழும். தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்னும் விசாரமிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமில்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஒருவருக்குத்தான் அப்படிச் செய்தாரென்பதும் அவனுக்குத் தோன்றவில்லை.

மனம் பிறரை ஆராய்வதை விட்டுத் தன்னை ஆராய முற்பட்டால் எந்தக் கேள்வியும் எழாது.

எல்லாக் கேள்விகளுக்கும் சமாதானம் தனக்குள்ளேயே இருப்பதை அப்போது உணர்வான்" என்று கூறி முடித்தார்.

பகவான் அருளிய இந்த உபதேசம் அந்த இளைஞனுக்கு மட்டுமே அல்ல.

அவன்தான் எழுந்து போய் விட்டானே!

நம் ஒவ்வொருவருக்கும் தான். இந்த அரிய உபதேசம் அருளப்பட்டது.

மனம் பிறரை ஆராயத் தலைப்படுவதைத் தடுக்க வேண்டுமானால்,தன்னை ஆராய்ந்து அடங்க வேண்டும்.

இதுதான் நமது ஸ்ரீ ரமண பகவானது தலையாய உபதேசமாகும்.

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.