·   ·  686 posts
  •  ·  0 friends

புன்னகை

அவர்கள் வகுப்பிற்கு புதிதாக வந்திருந்தாள் மலர்விழி. அழகு என்றால் அப்படியொரு அழகு. அதனால் அவளுடன் நட்பு கொள்ள வகுப்பு மாணவிகள் அனைவரும் போட்டா போட்டி போட்டனர்.

மலர்விழி அழகிதானே தவிர மற்றபடி அவள் முகத்தில் சிறு புன்னகையும் இருக்காது. யாருடனும் பேச மாட்டாள். யாராவது நட்பு கொள்ள அவள் அருகில் வந்தால் வறட்டுப் புன்னகையுடன் பார்ப்பாள். அவ்வளவுதான். ஒரு சிறு பேச்சும் பேசமாட்டாள்.

படிப்பில் ஓரளவுக்கு சிறந்த மாணவியாகவே இருந்தாள்.

அவள் நிலையை ஆசிரியையும் அறிந்தார்.

"மலர்விழி, நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நல்லாப் படிக்கவும் செய்யறே, ஆனா உன் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா? அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும்" என்றார்.

அவருக்கும் ஒரு சிறு வறட்டுப் புன்னகையையே பதிலாக தந்தாள் மலர்விழி.

அதோடு விட்டுவிட்டார் ஆசிரியை.

“அவள் இயல்பே அப்படித்தான் போலும். நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று நினைத்துக் கொண்டார் ஆசிரியை.

மாணவிகளும் அவளிடம் நெருக்கம் காட்ட முயலவில்லை.

இந்த நிலையில்தான் பள்ளியின் சார்பில் ஒரு செய்முறை கண்காட்சிக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருபுறமும் மாணவிகள் இரண்டு இரண்டு பேராக பிரிந்து ஜோடி போட்டு வரிசையாக சென்றனர். மலர்விழி ஜோடியாக கோமதி கிடைத்திருந்தாள்.

வழியில் கோமதியும் மலர்விழியுடன் பேச பல வழிகளிலும் முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை.

அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ராமலிங்கா மில் பஞ்சாலைக்குச் சென்றனர். அந்த ஆலை முழுவதும் சுற்றி வந்தனர்.

பஞ்சு எப்படி நூலாகிறது? பின்னர் எப்படி ஆடையாகிறது? என்பதை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.

இடையில் சாப்பிடச் சென்றனர். அந்த ஆலையின் சார்பில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

மாணவிகள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டனர். கோமதி முதல் ஆளாக சாப்பிட்டு எழுந்தாள். இலையைக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள்.

மலர்விழி மெதுவாகச் சாப்பிட்டாள். எல்லா மாணவிகளும் எழுந்து விட்டனர். மலர்விழி மட்டும் உட்கார்ந்திருந்தாள்.

எழுந்த மாணவிகள் மீண்டும் ஆலையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர்.

கோமதி மட்டும் மலர்விழி அருகிலேயே நின்றாள். அவளும் சாப்பிட்டு முடித்தாள்.

'இலையை எங்கே எடுத்துச் செல்வது?' என்று தெரியாமல் கையில் பிடித்தபடி விழித்தாள்.

கோமதி அவள் கையிலிருந்த இலையை வாங்கினாள்.

"கொண்டா நான் போய் போட்டுட்டு வர்றேன்" என்றவள் விறுவிறுவென்று குப்பைத் தொட்டியை அடைந்து அதில் போட்டு விட்டு வந்தாள்.

"வா போகலாம்" என்றாள்.

இருவரும் ஆலைக்குள் சென்றனர். அந்த நாளை ஆலையிலேயே கழித்தனர். மாணவிகள் அங்கிருந்தே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்

ஆசிரியையிடம் விடை பெற்று அவர்களும் கிளம்பிச் சென்றனர்.

மறுநாள்.

பள்ளிக்கு வந்த மலர்விழி கோமதியைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள்.

அதைப் பார்த்த வகுப்பு மாணவிகள் அனைவரும் அதிசயப் பட்டனர்.

கோமதி அதைப் பயன்படுத்திக் கொண்டாள். மலர்விழியிடம் பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பதிலாக கிடைத்தன.

இன்னும் சில மாணவிகளும் மலர்விழியிடம் நெருங்கினர். ஆனால் எல்லாரையும் விட கோமதியிடம்தான் சற்றே அதிகமாக ஒட்டிக் கொண்டாள் மலர்விழி.

சில நாட்களிலேயே மலர்விழியின் நிலையை புரிந்து கொண்டாள் கோமதி.

ஒருநாள் தன் வீட்டிற்கு மலர்விழியை அழைத்துச் சென்றாள் கோமதி.

கோமதி வீட்டில் எல்லாருமே இயல்பிலேயே கலகலப்பாக இருந்தனர். சிரிக்கச் சிரிக்கப் பேசினர். அப்பாவும், அம்மாவும் தங்கள் பிள்ளைகள் மேல் பாசத்தை வாரிவாரி வழங்கினர். மலர்விழியிடமும் அதே பாசத்தைப் பொழிந்தனர்.

அவர்கள் பாசத்தில் நெக்குருகிப் போனாள் மலர்விழி.

அன்றுதான் தன் கஷ்டத்தை முதல் முறையாக உடைத்தாள் மலர்விழி.

"நானும் உங்க வீட்டில் பிறந்திருக்கலாம்” என்றாள்.

அதன் பின்னர் தங்கள் வீட்டு நிலையையும் கூறினாள்.

மலர்விழி அவர்கள் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தினமும் சண்டைதான், அடிதடிதான். அவர்கள் சண்டையில் மலர்விழி பற்றியே மறந்து போனார்கள்.

அன்பு, பாசம், அரவணைப்பு என்று ஒரு சிறிதும் மலர்விழிக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே சோகச் சித்திரமாக அவள் வலம் வந்தாள்.

மலர்விழியின் வீட்டிற்கு ஒருநாள் சென்றாள் கோமதி. அவள் அப்பா, அம்மா இருவரும் இரு துருவங்களாக இருந்தனர்.

அவர்கள் இருவரிடமும் தனித்தனியாகப் பேசினாள் கோமதி.

"உங்கள் சண்டையால் மலர்விழி மேல நீங்க அக்கறை காட்டறது இல்லை. அது அவளோட மன நிலையை மிகவும் பாதிச்சிருக்கு. அதனால அவளோட எதிர்காலம் பாழாயிடும். நீங்க சண்டைக்காரர்களாகவே இருங்கள். ஆனால் மலர்விழி கிட்ட மட்டும் அன்பா இருங்க" என்றாள் கோமதி.

அதன் பின்னர் மலர்விழி மேல் பெற்றோர் அக்கறை காட்டினர். அவளுக்காக ஒன்று சேர்ந்தது போல் நடித்தவர்கள் நிஜமாகவே ராசியாகி விட்டனர்.

வருகிறாள். மற்ற மலர்விழி இப்போதெல்லாம் புன்னகை நிறைந்த முகத்துடன் பள்ளிக்கு மாணவிகளிடமும் நன்றாக கலகலவென்று பழகுகிறாள்.

அவள் புன்னகை முகத்தைப் பார்த்த ஆசிரியை மலர் விழியிடம்,

"ஆஹா இந்தப் புன்னகை அப்படியே உன்னை தேவதை போல காட்டுது” என்றார்.

  • 86
  • More
Comments (0)
Login or Join to comment.