
கனடாவில் வேலை தருவதாக மோசடி செய்த இந்திய நிறுவனம்
பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd என்னும் நிறுவனத்தில் கனடாவில் வேலை தொடர்பில் விண்ணப்பித்துள்ளார்.
தங்களுக்கு பெங்களூருவிலும் கனடாவின் வன்கூவரிலும் அலுவலகங்கள் உள்ளதாக இணையத்தில் அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்ததைத் தொடர்ந்து, அதை நம்பி கனடாவில் வேலைக்காக அங்கு விண்ணப்பித்துள்ளார் சந்தன்.
கனடா விசா மற்றும் கனடாவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர் அந்நிறுவனத்தினர். உடனடியாக 50,000 ரூபாய் செலுத்தியுள்ளார் சந்தன். ஆனால், பல மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் சந்தன்.
அந்த நிறுவனத்தார் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததால் பொலிஸில் புகார் செய்துள்ளார் சந்தன். விசாரணையில், சந்தனுடைய நண்பர்கள் உட்பட பலர் அந்த நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொலிசார் Owlspriority India Pvt Ltd நிறுவனத்தின் இயக்குநரான Ninan Lawrence, மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் Vijaya Durga, Thota Akhil, Tabassum Naz, மற்றும் Vinay Kotari ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.