
கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய ஏஜெண்ட்
கனடாவுக்குச் செல்வதற்காக ஏஜண்ட் ஒருவரிடம் 9 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில், ஏஜண்ட் ஏமாற்றியதால் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார் இந்தியர் ஒருவர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ககன்தீப் சிங் (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்த டிராவல் ஏஜெண்டான ஷிஃபு கோயல் மற்றும் அவரது மனைவியான ரீனா கோயல் ஆகியோரிடம், தன்னைக் கனடாவுக்கு அனுப்ப உதவுமாறு கோரியுள்ளார் ககன்தீப் சிங். அவரை கனடா அனுப்புவதற்கான ஆவணங்கள் தயார் செய்வதற்காக இந்திய மதிப்பில் 9 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர் கோயல் தம்பதியர்.
தங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், சிங் 50,000 ரூபாய் கொடுக்க, சிங்குக்கு பணம் கடன் கொடுக்க பைனான்சியர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளனர் கோயல் தம்பதியர். தீப் பைனான்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான குர்தீப் சிங் அலுவாலியா, ககன்தீப் சிங்குக்கு 9 லட்ச ரூபாய் கடன் கொடுக்க, அந்த பணத்தை கோயல் தம்பதியரின் கணக்குக்கு அனுப்பியுள்ளார் சிங்.
ஆனால், தன் மகனை கோயல் தம்பதியர் கனடாவுக்கு அனுப்பவும் இல்லை, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் இல்லை என்கிறார் சிங்கின் தாயாகிய ஹர்ஜீத் கௌர்.
இதற்கிடையில், பைனான்சியரான அலுவாலியா கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு சிங்கை நிர்ப்பந்திக்க, மன உளைச்சலுக்காளான சிங் செவ்வாயன்று, அதாவது, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, விஷம் குடித்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் சிங். அதைத் தொடர்ந்து, கோயல் தம்பதியரும், பைனான்சியர் அலுவாலியாவும் சேர்ந்து தன் பிள்ளையை ஏமாற்றி, இப்படி ஒரு துயர முடிவை எடுக்க சிங்கைத் தூண்டிவிட்டதாக சிங்கின் தாயான கௌர் பொலிசில் புகாரளித்துள்ளார்.
கோயல் தம்பதியர் மற்றும் பைனான்சியர் அலுவாலியா மீது பொலிசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.