பொலிசார் துரத்தியதும் ஆற்றில் குதித்த ஏடிஎம் திருடர்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் திருடர்கள் இருவர் மதுபான விடுதி ஒன்றிலிருந்த ஏடிஎம் ஒன்றைத் தூக்கிச் சென்றார்கள்.
நேற்று மதியம் 3.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்ற திருடர்கள் இருவர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை திருட்டு ட்ரக் ஒன்றில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். பின்னர் ட்ரக்கும் ஏடிஎம் இயந்திரமும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏடிஎம் இயந்திரத்துக்குள் பணம் எதுவும் இல்லை. அதாவது, அதிலிருந்த பணத்துடன் திருடர்கள் தப்பிவிட்டார்கள்.
மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் இருவரையும் பொலிசார் தேடிக் கண்டுபிடிக்க, அவர்கள் இருவரும் தாம்ஸன் நதிக்குள் குதித்துள்ளார்கள்.
தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பொலிசார் திருடர்களைத் துரத்த, ஒருவர் சிக்க, மற்றவர் எப்படியோ தப்பிவிட்டார். அவரைத் தேடும் பணி தொடரும் நிலையில், அவரைக் குறித்த அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவரைக் கண்டால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.