
கனடாவில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தது
கனடாவின் லாவல் பல்கலைக்கழகம் (Laval University) மேற்கொண்ட அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்லும் விடயம் தெரியவந்துள்ளது.
கனேடிய கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள், ஆரோக்கியமான மாற்று உணவுகளை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. “உணவுகளின் விலை காரணமாக உருவாகும் சுகாதார சமத்துவமின்மையை குறைக்க அரசியல் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என இந்த ஆய்வை வழிநடத்திய இசபெல் பெட்டிக்ளெர்க் (Isabelle Petitclerc), கூறியுள்ளார்.
“பணக்காரர்கள் சிறிதளவு விலையுயர்ந்த ஆனால் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமில்லை என்பதே உண்மை,” என அவர் குறிப்பிட்டார். பெட்டிக்ளெர்க் தற்போது அதே பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் முனைவர் பட்டக் (Ph.D) கற்கைநெறியை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு ஆகஸ்ட் மாதத்தில் பொதுச் சுகாதார ஊட்டச்சத்து என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் Health Canada-வின் “High-in” உணவு லேபிள் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். இந்த லேபிள் ஒரு தயாரிப்பில் அதிக அளவில் சர்க்கரை, சோடியம் அல்லது கொழுப்பு உள்ளதைப் பொருளடக்கத்தில் குறிப்பிடுகிறது.
ஆய்வில் பகுதியாக்கப்பட்ட பண்டங்கள், காலை உணவு தானியங்கள், ஸ்நாக்ஸ், செயலாக்கப்பட்ட சீஸ், பிஸ்கட் மற்றும் கிராக்கர்கள் உள்ளிட்ட ஐந்து வகை தயாரிப்புகள் சேர்க்கப்பட்டன.