·   ·  310 news
  •  ·  0 friends

கனடா மற்றும் அமெரிக்காவில் திரும்பப் பெறப்படும் வாகனங்கள்

பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), மென்பொருள் கோளாறு (Software issue) காரணமாகக் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களின் ஆயிரக்கணக்கான கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

காரை பின்னோக்கிச் செலுத்தும்போது, அதன் பின்புற கேமரா சரியாக வேலை செய்யாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

கனடா போக்குவரத்துத் துறையின் (Transport Canada) சமீபத்திய அறிவிப்பின்படி, கார்களை ஸ்டார்ட் செய்த உடனே ரிவர்ஸ் கியர் போடும்போது, பின்புறக் கேமராவின் காட்சி திரையில் தோன்றுவதில் தாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் விதிமுறைகளின்படி, ரிவர்ஸ் கியர் போட்ட இரண்டு வினாடிகளுக்குள் பின்புற கேமரா காட்சி திரையில் தோன்ற வேண்டும். ஆனால், இந்த மென்பொருள் கோளாறினால் கேமரா காட்சி தெரியாமல் போவதால், காரை பின்னோக்கி எடுக்கும்போது பின்னால் இருக்கும் தடைகளை ஓட்டுநரால் பார்க்க முடியாது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள்: இந்த தொழில்நுட்பக் கோளாறால் பின்வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன:

• Tesla Model 3: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

• Tesla Model S: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

• Tesla Model X: 2022 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

• Tesla Model Y: 2020 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை

கனடாவில் மட்டும் மொத்தம் 13,846 வாகனங்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே போன்ற கோளாறுக்காக அமெரிக்காவில் 2,18,000-க்கும் அதிகமான டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்படும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மென்பொருள் சிக்கலைச் சரிசெய்ய கார்களை நேரடியாக தயாரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது. வழக்கம்போல இணையம் வழியாகவே இதற்கான மென்பொருள் அப்டேட்டை டெஸ்லா வெளியிட்டுள்ளது.

  • 191
  • More
Comments (0)
Login or Join to comment.