கனடாவில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓவன் சவுண்ட் நகரில், அடுத்தடுத்த இரண்டு இரவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்று, ஓவன் சவுண்ட் நகரைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, போதையிலிருந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்களது காரைத் திருடிச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அந்த நபரையும் காரையும் காவல்துறையினர் நகருக்குள் அடையாளம் கண்டு, நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் போக்குவரத்து சமிக்ஞைகளை மதிக்காமல், மிக அதிவேகமாக காரைச் செலுத்தி தப்பியோடினார்.
அவர் ஓட்டிய வேகம் அவருக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், காவல்துறையினர் அவரை காரில் துரத்துவதைக் கைவிட்டனர். எனினும், அன்றைய தினமே உள்ளூர் மதுபானக் கடை ஒன்றில் அவர் மதுவைத் திருடும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துரத்திச் சென்று அவரை இறுதியாகக் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த நபர், திங்கட்கிழமையன்று மீண்டும் அதே மதுபானக் கடைக்குச் சென்று இரண்டாவது முறையாகத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
கடையின் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்த காவல்துறையினர், கடையின் அருகே சில அடி தூரத்தில் வைத்து அவரை மீண்டும் கைது செய்தனர். தற்போது அந்த நபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் பின்வரும் 9 முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாகனத் திருட்டு, போதையில் வாகனம் ஓட்டுதல், 5,000 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களைத் திருடுதல், காவல் அதிகாரியைத் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.