
பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் பல்வேறு பண்டக்குறிகளைக் கொண்ட பிஸ்தாக்கள் மற்றும் பிஸ்தா கலந்த பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பண்டங்களை உட்கொண்டதால், சால்மோனெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடிய சுகாதார திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. நோய்த் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நாடு முழுவதும் இந்த பாதிக்கப்பட்ட பொருட்களால் 52 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிடோபாவில் ஒருவரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பேரும் ஒன்டாரியோவில் 9 பேரும் கியூபெக்கில் 39 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் நான்கு பங்கு பெண்கள்எனவும் நோயாளிகளின் வயது 2 முதல் 89 வரையிலானர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பொருட்கள் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் ஹபீபி, அல் மொக்தார் உணவு மையம் மற்றும் துபாய் ஆகிய பண்டக்குறிகளின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சால்மோனெல்லா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடன் மருத்துவர்களின் உதவியை நாடுமாறு கனடிய பொதுச் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.