நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை ஓடஓட விரட்டிய ஊழியர்கள்
வடக்கு லண்டனில் உள்ள இஸ்லிங்டன் (Islington) பகுதியில் உள்ள ஒரு துருக்கிய நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், கத்திகளைக் காட்டி மிரட்டி நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துணிச்சலாக செயல்பட்டு, துடைப்பம் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொள்ளையர்களை எதிர்கொண்டனர்.
இருப்பினும், கொள்ளையர்கள் தங்கம் மற்றும் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதேபோல் ஹார்ட்போர்ட்ஷையர் (Hertfordshire) பகுதியில் உள்ள ஒரு கடையில், கண்ணாடித் தடுப்புகளை உடைக்க செயின்சா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடைகள் மட்டுமின்றி, வீதிகளில் நடந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபர்களும் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வருவதால், அவர்களை அடையாளம் காண்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இந்த் தொடர் குற்ற சம்பவங்களைத் தொடர்ந்து, லண்டன் மாநகர காவல்துறை (Met Police) ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், நகரின் பல முக்கிய வீதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், வணிகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.