டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொரண்டோ பெரும்பாக பகுதிகளில் (GTA) ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதால், நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொரண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் (TRCA) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள நீர் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை, வெப்பமான காலநிலை மற்றும் உருகும் பனி ஆகியவை இணைந்து டொரண்டோ பிராந்திய ஆறுகளில் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடும்.
தற்போதைக்கு பெரும் வெள்ள அபாயம் ஏதும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒண்டாரியோவின் தற்போதைய நிலை இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக தெற்கு மற்றும் மத்திய ஒண்டாரியோவின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவை 'நீர் பாதுகாப்பு எச்சரிக்கையாக' (Water Safety Advisories) குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஒட்டாவா முதல் சர்னியா வரை பரவியுள்ள குறைந்தது 14 பாதுகாப்பு ஆணையங்கள் இன்னும் இந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நடைமுறையில் வைத்துள்ளன. இந்த வாரம் டொரண்டோவில் பெரிய அளவில் மழை இருக்காது என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.