·   ·  384 news
  •  ·  0 friends

சர்வதேச தரவுத் திருட்டு வழக்கு - கனடிய நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதி துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.

கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி ஜெனரல் ஏ. டைசன் டுவா தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ஸ்னோப்லேக்' என்ற மேகக்கணி தரவுச் சேமிப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில பிரபல நிறுவனங்கள் இந்த ஊடுருவலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.

கணினி மோசடி, வயர் மோசடி, தீவிர அடையாளத் திருட்டு மற்றும் அது தொடர்பான சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை மௌகா ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வரும் அக்டோபர் 27 அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

  • 25
  • More
Comments (0)
Login or Join to comment.