நகைக்கடையில் திருட குழந்தைகளைப் பயன்படுத்திய குடும்பம்
கனடாவின் கல்கரி நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான 'மார்க்கெட் மால்' நகைக் கடையொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திட்டமிட்டு நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தியமைக்காக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 17ஆம் திகதி, மார்க்கெட் மாலில் உள்ள 'ஹில்பெர்க் & பெர்க்' நகைக் கடை ஊழியர் அளித்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர்.
கடையின் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஒன்றாகக் கடைக்குள் நுழைந்தது தெரியவந்தது.
குடும்பத்திலிருந்த பெரியவர்கள் கடையின் ஊழியர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர்.
அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும் இணைந்து சுமார் 4,000 டாலர் மதிப்புள்ள பல நகைகளைத் திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் சென்ற பின்னரே நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், நகைகளைத் திருடிய 16 மற்றும் 8 வயது சிறுவர்களையும், அவர்களுடன் இருந்த ஒரு பெரியவரையும் வணிக வளாகத்தின் மற்றொரு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதற்கிடையில், அந்தக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த லொறி ஒன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் பயன்படுத்திய அந்த லொறியும் திருடப்பட்ட ஒன்று என்பதும், அதனுள் பிற கடைகளில் இருந்து திருடப்பட்ட மேலும் பல பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் 16 வயது சிறுமி, 17 வயது சிறுவன், 25 வயது பெண் மற்றும் 34 வயது பெண் ஆகிய நால்வர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை, திருட்டுச் சம்பவத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லாத சிறுவர்களின் தந்தையிடம் 8 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.