அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்
ஈரானின் அண்டை நாடான அஜர்பைஜானின் நாக்சைவான் பகுதியில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டில் அமெரிக்காவின் ராணுவ தளம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அஜர்பைஜைன் செயல்படுவதால் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி தருவோம் என்று அஜர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி மற்றும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது.
இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஈரானில் உள்ள குர்து கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
இதன்மூலம் ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடையும். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். 2 வாரங்கள் வரை போர் நீடிக்கக்கூடும்" என்று தெரிவித்தன.