கனடிய பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியெவ்ரே (Pierre Poilievre) ஆகியோர் இந்த வாரம் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் X சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், பிரதமரை அவசரமாக சந்திக்க விரும்புவதாக பொய்லியெவ்ரே தெரிவித்துள்ளார்.
“நடைமுறை தீர்வுகளை முன்வைக்கவும், பிற கருத்துகளை கேட்கும் மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட்டு விரைவான முடிவுகளை எட்டவும் இந்த சந்திப்பு அவசியம்,” என அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் சுங்க வரிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும், அமெரிக்காவுடன் சுங்க வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் கன்சர்வேட்டிவ் கட்சி தயாராக இருப்பதாகவும் பொய்லியெவ்ரே தெரிவித்தார்.
ஜனவரி இறுதியில் பிரதமர் கார்னிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதிய பொய்லியெவ்ரே, நீண்ட காலமாக தாமதிக்கப்பட்ட கொள்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த தனது கட்சியின் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அந்த கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.