·   ·  316 news
  •  ·  0 friends

பிரான்ஸில் 11 வயது சிறுவன் கொடூர கொலை

 பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட அச்சிறுவனின் கழுத்தில் ஈரமான குளியல் துண்டு (Wet bath towel) மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பிரெஞ்சு போலீசார், திங்கட்கிழமை அன்று 16 வயது சிறுவன் ஒருவனை அவனது வீட்டிலேயே வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இதற்கிடையில், இந்த கொலையுடன் தொடர்புடைய 15 வயது சிறுமி ஒருத்தி தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தாள். சிறுவன் உயிரிழந்த அன்று மதிய வேளையில், அவனுடன் இந்த இரு பதின்ம வயதுடையவர்களும் (Teenagers) ஒன்றாக காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் பிரடெரிக் டீலெட் (Frederic Teillet) உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அவர்கள் இருவரும் “மைனர் சிறுவனைக் கொலை செய்தல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இக்கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் மற்றும் சூழ்நிலைகள் என்ன என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.

மேலும் ஆதாரங்களை திரட்டும் நோக்கில், சம்பவ இடமான விலெய்ன் ஆற்றில் போலீஸ் முக்குளிப்பாளர்கள் (Divers) தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைதியான நகரப் பகுதியில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.