ஏர் இந்தியா விமானி கனடா விமான நிலையத்தில் கைது
கனடாவின் வன்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
வன்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாக கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.