
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
நாகாலாந்து கவர்னரும் பா.ஜ., முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பாஜவின் முகமாக இருந்தவர் இல.கணேசன். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது கண்ணியமான பேச்சினை, பாஜ கட்சியினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் ரசித்துக் கேட்பர். அந்தளவுக்கு நாகரிகமாக, நகைச்சுவையுடன் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் இல கணேசன். நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.
கடந்த மாதம் சென்னை வந்த அவர், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார்.
கடந்த 8 ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தார். நேற்று( ஆகஸ்ட்.15) மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.