·   ·  275 news
  •  ·  0 friends

95 வயதிலும் தொண்டு செய்யும் மூதாட்டி

கனடாவில் எமிலி கோசாக் என்ற 95 வயதான மூதாட்டி, தனது அர்ப்பணிப்பு மற்றும் அயராத சேவையால் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஹோலி ஃபாமிலி நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கடந்த 34 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டராக செயல்பட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டு தனது தாயார் அங்கு வசித்தபோது தொடங்கிய இந்த சேவை, இன்று வரை இடையறாது தொடர்ந்து செய்து வருகிறார்.

நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், பிங்கோ விளையாட்டுகளை நடத்துதல், தேவையான உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

95 வயதிலும் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு, அனைவரின் வாழ்விலும் ஒளி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

“ஒவ்வொரு நாளும் எனக்கு செய்ய ஏதோ ஒன்று இருக்க வேண்டும்” என்ற அவரது வாழ்க்கை நோக்கம் பலருக்கும் ஊக்கமாக உள்ளது.

முன்னதாக இடுப்பு எலும்பு முறிவு, புற்றுநோய், இதய நோய் தாக்கங்கள் போன்ற சவால்களை சந்தித்திருந்தாலும், அவை எதுவும் அவரது சேவையை தடுக்கவில்லை.

தற்போது நடை உதவிக்கருவி பயன்படுத்தினாலும், தனது தொண்டை தொடர்ந்து செய்கிறார்.

இந்த நர்சிங் ஹோமின் பராமரிப்பு இயக்குநரான ஸ்டேசி மோர்கன், “எமிலி போன்ற தன்னார்வலர்கள் எங்கள் அமைப்பின் இதயம். அவர் தினமும் வந்து நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்” என்று பாராட்டினார்.

மேலும், 60-70 பெண்கள் கொண்ட தன்னார்வ குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எமிலி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். “95 வயதிலும் இவ்வாறு சேவை செய்வது மிக அபூர்வம்” எனவும் அவர் குறித்து கூறப்படுகிறது. “மற்றவர்களும் அதிகமாக தன்னார்வ பணிகளில் ஈடுபட வேண்டும்” என எமிலி கோசாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சிறிய உதவிகள்கூட பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதையே அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.

  • 71
  • More
Comments (0)
Login or Join to comment.