சீனாவுடன் மூலோபாய கூட்டணியை பேண விரும்பும் கனடா
சீனாவுடன் மூலோபாய கூட்டணியை பேண விரும்புவதாக கனடா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை “உலகளாவிய குழப்பம் ஏற்படுத்தும் சக்தி” என குற்றம் சுமத்திய நிலையில், தற்போது அதே நாட்டை ஒரு மூலோபாய ரீதியான பங்காளி (strategic partner) எனக் காணத் தொடங்கியுள்ளது என கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
“இரு நாடுகளுக்கிடையே சில பிரச்சினைகள் இருந்தாலும், அவை முழு உறவை பாதிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரமும் பாதுகாப்பும் ஆகிய துறைகளில் கனடா தனது நலன்களை முன்னேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் என தெரிவித்துள்ளார். அனிதா ஆனந்த் சீனா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்ததையடுத்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
விரைவில் பிரதமர் மார்க் கார்னி ஆசியப் பயணத்தை மேற்கொள்கிறார்; அவர் மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “இந்தோ-பசிபிக் தந்திரம்” (Indo-Pacific Strategy) ஆவணத்தில் சீனாவை “நமது மதிப்புகளுக்கும் நலன்களுக்கும் முரணான, அதிகரித்து வரும் குழப்ப சக்தி” என விவரித்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“நாம் பாதுகாப்பு, மனித உரிமைகள் குறித்து கவலை வெளியிடும் போதும், பொருளாதார அழுத்தங்களை குறைத்து புதிய விநியோகச் சங்கிலிகள் (supply chains) உருவாக்கும் நடைமுறை அணுகுமுறை அவசியம்,” என அவர் குறிப்பிட்டார்.