·   ·  422 news
  •  ·  0 friends

கனடாவில் அதிகரித்து வரும் கருணைக்கொலைகள்

கனடாவில் மருத்துவ உதவியுடன் கூடிய கருணைக்கொலை (MAID) மூலம் உயிரிழப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருகிறதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் சில பிராந்தியங்களில் பதிவாகும் மொத்த உயிரிழப்புகளில் 10-ல் ஒரு மரணம் மருத்துவ உதவியுடனான தற்கொலையினாலேயே நிகழ்கிறது என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கனடா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கப்பட்ட ‘மருத்துவ உதவி இறப்பு திட்டம்’ (Medical Assistance in Dying – MAID) மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஏறுமுகத்தில் உள்ளது.

நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 5 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் இத்திட்டத்தின் மூலமே நிகழ்கின்றன. குறிப்பாகக் கியூபெக் (Quebec) போன்ற மாகாணங்களில் இது 7 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

புற்றுநோய் மற்றும் மீளமுடியாத கடுமையான நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களே இச்சேவையை அதிகம் நாடுகின்றனர்.

தொடக்கத்தில் உடனடி உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2021-க்குப் பிறகு நீண்டகால நாட்பட்ட நோயாளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டதே இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், வறுமை, போதிய மருத்துவப் பராமரிப்பின்மை மற்றும் மன அழுத்தத்தினால் அவதியுறுபவர்கள்கூட இத்திட்டத்தின் கீழ் மரணத்தைத் தழுவுவதாகச் சமூக ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இத்திட்டத்தைக் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், புதிய புள்ளிவிவரங்கள் சர்வதேச அளவில் மாபெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 

  • 26
  • More
Comments (0)
Login or Join to comment.