கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைவு
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் 11,390 புதிய மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட 60 சதவிகிதம் குறைவாகும்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவரும் கனடா அரசு, அடுத்த ஆண்டிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.