இந்திய பிரதமர் மோடியை வித்தியாசமாக புகழ்ந்த டிரம்ப்
தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்று வரும் ஆசிய -பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் எனவும், அதனை எப்படி நிறுத்தினேன்? என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார். இந்த வேளையில் பிரதமர் மோடியை புகழ்ந்தார். அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தை கவனம் பெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது: ‛‛இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இருதரப்புக்கும் நல்ல உறவு உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் நல்ல மனிதர். அவர்களிடம் ஃபீல்ட் மார்ஷல் (ராணுவ தளபதி அசீம் முனீர்) உள்ளர். அவர் ஏன் ஃபீல்ட் மார்ஷல் என அழைக்கப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியும்? அவர் சிறந்த போராளி. இதனால் அனைவரையும் பற்றி எனக்கு தெரியும். இருவரும் மோதியபோது 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் படித்தேன். அவர்கள் 2 நாடுகளும் அணுஆயுதத்தை வைத்துள்ளனர். அணுஆயுதத்தை பயன்படுத்தும் நிலைக்கு கூட செல்வார்கள். இதனால் பிரதமர் மோடிக்கு போன் செய்தேன். வர்த்தகம் தொடர்பான ஒப்பந்த்ததை செய்ய முடியாது என்று கூறினேன். வர்த்தகம் வேண்டும் என்று அவர் கூறினார். நான் முடியாது.. முடியாது.. பாகிஸ்தானுடன் போரை தொடங்கி உள்ளீர்கள். இதனால் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறினேன்.
அதன்பிறகு பாகிஸ்தான் பிரதமருக்கு போன் செய்தும் இருவரும் வர்த்தகம் செய்ய முடியாது. ஏனென்றால் இந்தியாவுடன் சண்டையிடுகிறீர்கள் என்று கூறினேன். ஆனால் இருவருமே சண்டையிட அனுமதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் வலிமையான மனிதர்கள். பிரதமர் மோடி அழகானவர். அவர் ஒரு ‛கில்லர்'.கடினமானவர். நாங்கள் சண்டை தான் போடுவோம் என்று கூறினார். அதன்பிறகு 2 நாட்களில் என்னிடம் பேசினார்கள். அப்போது தான் புரிந்து கொண்டோம் என்று போரை நிறுத்தினர். இது எப்படி இருக்கிறது? இது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஜோ பைடன் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பார்னு நினைக்கிறீங்களா? நான் அப்படி நினைக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை கில்லர் என டொனால்ட் டிரம்ப் கூறியதன் பின்னணியில் தவறான எண்ணம் கிடையாது. பொதுவாக ஆங்கிலத்தில் ஒருவர் அதிக பலம் நிறைந்தவர், மிகவும் கடினமானவர் என்பதை குறிப்பிட He is a Killer என்ற வார்த்தை பயன்படுத்துவது உண்டு. அந்த வகையில் தான் மோடியை, டிரம்ப் ‛கில்லர்' என்று கூறியுள்ளார்.