
இணையத்தில் விற்கப்படும் மருந்துகள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் ஆன்லைனில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத உடற்பயிற்சி மருந்துகளால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அந்நாட்டு சுகாதார நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடற்கட்டமைப்பு, வயதான எதிர்ப்பு அல்லது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத ஊசி மூலம் செலுத்தப்படும் பெப்டைட் மருந்துகளை பறிமுதல் செய்ததாக துறை அறிவித்தது.
இந்த பொருட்கள் “கனடா பெப்டைட்” என்ற இணையதளத்தில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞாயிறு மதியம் வரை, அந்த இணையதளம் பராமரிப்பு காரணமாக முடக்கப்பட்டிருந்தது.
ஊசி மூலம் செலுத்தப்படும் பெப்டைட் மருந்துகள் மருந்துச் சீட்டு மருந்துகளாக ஒழுங்குபடுத்தப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்டவை உட்பட நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்பட்ட எந்தவொரு பொருளையும் துறை அங்கீகரிக்கவில்லை என கனடிய சுகாதார நிறவனம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத ஊசி மருந்துகளைப் பயன்படுத்துவது தொற்று, ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் ஒருவர் உட்கொள்ளும் பிற மருந்துகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை குறிப்பிடுகிறது.
இந்த பொருட்களைப் பயன்படுத்துவது, லேபிளில் குறிப்பிடப்படாத அல்லது குறிப்பிடப்பட்டிருக்கக் கூடிய பொருட்கள், சேர்க்கைகள் அல்லது மாசுபடுத்திகள் காரணமாக மற்ற அபாயங்களையும் ஏற்படுத்தலாம். இவை பாதுகாப்பாக உற்பத்தி செய்யப்படவோ அல்லது சேமிக்கப்படவோ இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத ஊசி மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் உடல்நலக் கவலைகள் இருந்தால், மருத்துவ நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரசாயனங்கள் மற்றும் பிற ஆபத்தான கழிவுகளை மாநகராட்சி அல்லது பிராந்திய வழிகாட்டுதல்களின்படி அகற்ற வேண்டும் அல்லது உரிய முறையில் அகற்றுவதற்கு உள்ளூர் மருந்தகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மருந்துகளை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்றும், மருந்துச் சீட்டு மருந்துகளை உரிமம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் கனடிய சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.