கனடிய எழுத்தாளருக்கு புக்கர் விருது
உலகின் முதல் நிலை இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் புக்கர் விருது கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட டேவிட் ஸ்லே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அண்மைய பிளெஸ் என்ற நாவலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹங்கேரிய பிரஜை ஒருவர் ஈராக்கில் பணியாற்றி அதன் பின்னர் இங்கிலாந்தில் வாழும் போது அவர் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கதைக்கரு மொழி பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நாவலுக்கு விருது வழங்கப்பட்டதாக புக்கர் விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது. புக்கர் விருதுக்காக சுமார் 153 நாவல்கள் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
டேவிட் கனடாவின் மொன்றியல் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய தாய்க்கும் ஹங்கேரிய தந்தைக்கும் பிறந்தவரே இந்த டேவிட் ஸ்லே என்பதும் குறிப்பிடத்தக்கது. டேவிட் குடும்பத்தினர் பின்னர் இங்கிலாந்தில் குடியேறியதுடன் பின்னர், ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியில் வாழ்ந்தார்.
இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டிலும் டேவிட்டின் ஆல் தட் மேன் இஸ் என்ற நாவல் புக்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு அதில் முதல் பரிசு கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.