
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த புதின்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், மாநாட்டிற்கு இடையே ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினர். இருதலைவர்களின் சந்திப்பு தொடங்கும் முன்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது காதில் இயர்போனை மாட்ட தெரியாமல் தடுமாறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன. முன்னதாக ரஷ்ய அதிபர் புதினும் ஷெபாஸ் ஷெரீப் தடுமாறுவதை கண்டு சிரித்தார்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் ஷாங்காய் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு சீனா தலைமை வகித்தது.
இந்த கூட்டத்திற்கு இடையே உலக தலைவர்கள் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினர். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார். அப்போது இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் சந்தித்து பேசினர்.
அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் தொடக்கத்தில் காதில் வைக்க கூடிய இயர்போனை எப்படி மாட்டுவது என தெரியாமல் தடுமாறினார் ஷெபாஸ் ஷெரீப். காதில் மாட்டுவதற்கு அவர் முயற்சித்த போதும் கூட நிற்காததால், "என்னடா இது..." என இயர்போனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு மீண்டும் மாட்ட முயற்சித்தார்.
இதனை எதிர்முனையில் இருந்து பார்த்த புதினால் சிரிப்பை அடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அனைவருக்கும் தெரியும்படி சிரித்துவிட்டார். பின்னர் தனது இயர்போனை கழற்றி மாட்டிய புதின், அதை எப்படி மாட்டுவது என்பதை செய்து காண்பித்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த சுவாரசிய நிகழ்வுக்கு பிறகு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தனர்.