·   ·  415 news
  •  ·  0 friends

இசை நிகழ்வு கூட்டத்தில் வாகனம் புகுந்து 6 பேர் காயம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட்-டைட் பகுதியில் நடைபெற்று வரும் இசை நிகழ்வில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை 4:30 மணியளவில் புனித ஜோசப் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதுடைய இரண்டு பெண்களும், 17 முதல் 21 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து வாகனத்தைச் செலுத்திய 20 வயதுடைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு கியுபெக் நகரில் வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ள விழா ஏற்பாட்டாளர்கள், திட்டமிட்டபடி திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு கியுபெக் மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் பிரேஷெட் நேரில் வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணப் பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரெனியர் உட்படப் பல அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு தங்களது அனுதாபங்களைப் பதிவு செய்துள்ளதுடன், உடனடியாக செயல்பட்ட பொலிஸார் மற்றும் முதலுதவி பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • 31
  • More
Comments (0)
Login or Join to comment.