Feed Item

ஆன்மீகம் குறித்து ஒருவனுக்கு சந்தேகம் வந்தது. யாரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் எனக் குழம்பிக் கொண்டிருந்தவன் மூளைக்குள் விவேகானந்தர் பளிச்சிட்டார்.

உடனே விவேகானந்தரை தேடிச்சென்று வணங்கி கேட்டான்,

'சாமி எனக்கு ஆன்மீகத்தில் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது.

போன வாரம் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்த ஆன்மீக பெரியவர் ஒருவர் சொற்பொழிவாற்றும் போது ஒரு மனிதன் சதாகாலமும் இறைவனை நினைக்கவில்லை என்றால் அவன் பிறப்பெடுத்ததில் பயனில்லை எனச் சொன்னார்.

அடுத்த நாள் வந்திருந்த ஒரு இலக்கிய பேச்சாளர் பேசும்பொழுது மனிதன் பூமியில் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் போனால் அவன் பிறப்பெடுத்ததில் பயனில்லை எனச் சொன்னார்.

இதில் எது சரி என எனக்குத் தெரியவில்லை.

நான் சதாகாலமும் இறைவனை நினைப்பதா? அல்லது என்னுடைய கடமைகளை மட்டும் செய்வதா?

எனக்கு விளக்கம் தாருங்கள் சுவாமி'

சற்று நேரம் அவனை உற்றுப் பார்த்த சுவாமி விவேகானந்தர் அவனிடம் கேட்டார்,

'நான் உனக்கு ஒரு கதை சொல்லி அதன் முடிவில் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்கிறாயா?'

வந்தவன் சொல்கிறேன் என்பது போல் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான்.

விவேகானந்தர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

'ஒரு விவசாய இடம் இரண்டு பேர் வேலை கேட்டு வருகிறார்கள்.

அவர்களில் ஒருவன் எந்த வேலையும் செய்யாமல் விவசாயின் காலடியில் அமர்ந்து அவரை புகழ்ந்து துதி பாடிக் கொண்டு பொழுதை கழிக்கிறான்.

இன்னொருவன் விவசாயியை கண்டு கொள்ளாமல் கலப்பையை எடுத்துக்கொண்டு நிலத்தில் இறங்கி நிலத்தை உழுது, களை எடுத்து, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி மடையை அடைத்து வேலை முடித்து திரும்புகிறான்.

இருவரில் வந்த விவசாயி மாலையில் யாருக்கு சம்பளம் தருவான்?'

சந்தேகம் கேட்டு வந்தவன் பளிச்சென சொன்னான்,

'நிலத்தில் இறங்கி யார் வேலை செய்தாரோ அவருக்கு தான் சம்பளம் தருவார்'

விவேகானந்தர் பதில் கேள்வி கேட்டார்,

'ஏன்..?'

வந்தவன் தயக்கத்தோடு பணிவாகச் சொன்னான்,

'என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்களே ஏன்னு என்கிட்ட கேட்கலாமா? அந்த விவசாயி வேலைக்கு ஆள் வச்சதே விவசாயத்தை பார்த்துக் கொள்ளத்தானே.

அப்படி இருக்கும்போது வந்த வேலையை விட்டுவிட்டு வெறுமனே விவசாயியை புகழ்ந்து பாடினால் விவசாயிக்கு என்ன லாபம்?

அவருடைய நோக்கம் நிறைவேறவில்லையே..!

அதனால் வயக்காட்டில் இறங்கி வேலை பார்த்தவருக்கு தான் சம்பளம் கிடைக்கும்'

விவேகானந்தர் புன்னகைத்தை படி சொன்னார்,

'நீ சொன்ன பதிலிலேயே உன் கேள்விக்கான விடையும் இருக்கிறது.

இறைவன் உன்னை பூமிக்கு அனுப்பியதே உன்னுடைய உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பூமியில் உள்ள மக்களுக்கும், இன்ன பிற உயிர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதற்காகத் தான்.

என்ன நோக்கத்திற்காக அவர் உன்னை அனுப்பினாரோ அதை நிறைவேற்றாமல் வெறுமனே இறைவனை நினைத்துக் கொண்டும், புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தால் இறைவனுடைய அருள் பார்வை உனக்கு எப்படி கிடைக்கும்?

எங்கிருந்து வந்தோமோ அங்கேயே தான் போகப் போகிறோம்.

பிரபஞ்ச கால அளவை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பூமியில் நம்முடைய மனித ஆயுட்காலம் சொற்பத்திலும் சொற்ப அளவே.

அதனால் நீ உன்னுடைய கடமைகளை செய்வதுதான் . இடையில் நேரம் கிடைக்கும் பொழுது இறைவனை நினைத்தால் போதுமானது.

அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் நீ செய்கின்ற கடமைகளிலும் நிறைந்து இருக்கிறான். அதனால் நீ கடமையை செய்தாலும் இறைவனுக்கான சேவையை தான் செய்து கொண்டிருக்கிறாய்.

உன்னுடைய கடமைகளை மட்டும் செய்ய பார்'

வந்தவன் தெளிவடைந்தான். விவேகானந்தரிடம் பணிவாக கேட்டான்,

'அப்படியானால் சதாகாலமும் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதால் எந்த புண்ணியமும் கிடையாதா?'

விவேகானந்தர் சொன்னார்,

'கண்டிப்பாக உண்டு. ஆனால் மனிதப் பிறவியில் செய்ய விட்ட கடமைகளை மறு பிறவிகளில் பல்வேறு உயிரினங்களாக பிறந்து அந்த கடமைகளை எல்லாம் தீர்க்க வேண்டி வரும்.

இறைவனை சென்றடைய நேர்வழி இருக்கும் பொழுது சுற்று வழியில் செல்ல உனக்கு விருப்பமா?'

வந்தவன் வணங்கி விடைபெற்று விவேகானந்தரிடம் சொன்னான்,

'நான் மட்டுமல்ல; இனி என் பரம்பரையே கடமையை செய்து முடித்து இறைவனை சென்றடைய நேர்வழியிலேயே நடப்போம்'

  • 177