நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கணவனை பார்த்து பேசிவிட்டு திரும்பிய மனைவி கடும் கோபத்துடன் சிறை அதிகாரிகள் இருந்த அறைக்கு சென்றாள்.
'என்னுடைய கணவர் இருக்கும் சிறைக்கு அதிகாரி யார்?'
வார்த்தைகளில் அனல் தெறிக்க கேட்டாள்.
ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்த வயதில் மூத்த அந்த அதிகாரி பதில் சொன்னார்,
'நான் தான்..! என்ன விஷயம்?'
அடுத்த நொடி அவள் பத்திரகாளியாய் மாறி ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தாள்,
'என்ன விஷயமா? இது சிறைச்சாலையா அல்லது சித்திரவதை கூடமா? என்னுடைய புருஷனை இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கீங்க?
இதை நான் சும்மா விடமாட்டேன். மனித உரிமைகள் ஆணையத்திற்கு எடுத்துச் சென்று உங்கள் அனைவரின் வேலையையும் காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்'
அந்த அதிகாரி குழப்பமாய் கேட்டார்,
'ஏம்மா இவ்வளவு கோபப்படுற? அப்படி என்ன தப்பு நடந்து போச்சு?'
'என்ன தப்பு நடந்து போச்சா..? என் புருஷனுக்கு இவ்வளவு கடுமையான வேலையை கொடுத்து செய்யச் சொன்னா அவர் சீக்கிரம் செத்துப் போயிட மாட்டாரா?'
அதிகாரிக்கு மேலும் மேலும் குழப்பம் அதிகரித்தது. பதற்றமாய் பேசினார்,
'நாங்க எங்கம்மா உன் வீட்டுக்காரனுக்கு வேலை கொடுத்தோம்? வேளாவேளைக்கு நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு செல்லுல படுத்து உறங்கிக்கிட்டு தானே இருக்கான்'
அதிகாரியின் பதில் அவளை காண்டாக்கியது. பற்களை நறநறவன கடித்துக் கொண்டு சொன்னாள்,
'மனுஷத் தன்மையில்லாமல் பேசுறதுல போலீஸ்காரங்களை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவாரு. அது சரியாத்தான் இருக்கு.
வெறும் ஒரு அடி இரும்பு கம்பியை மட்டும் கையில கொடுத்து ஜெயிலுக்கு அடியிலிருந்து ஜெயிலுக்கு வெளியே இருக்கிற ரோடு வரைக்கும் இம்மி கூட சத்தம் வராமல் சுரங்க பாதை தோண்ட சொல்லி இருக்கீங்க.
மூணு மாசமா மனுஷன் படாத பாடுபட்டு தோண்டினதுல அவர் கையெல்லாம் சிவந்து புண்ணாகிப் போய் இருக்கு. பாதி தூரம் தான் தோண்டி இருக்காராம். இன்னும் மீது தூரம் தோண்டி வேண்டி இருக்குன்னு ரொம்ப சலிப்பா சொன்னாரு.
தோண்டுறதுக்கு அவருக்கு துணையா கூட ரெண்டு பேரை அனுப்பினா நீங்க என்ன குறைஞ்சா போயிருவீங்க?'
சிறைக்குள் இருந்து நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கணவன் மெல்ல மயக்கத்திற்கு தாவிக் கொண்டிருந்தான்.
- 269