ஈழம் தமிழர்களிடம் போராட்டம் என்ற சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது என மறைந்த புஸ்பராணி அவர்களுக்கான அனுதாபச் செய்தியில் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.
பிரான்சில் அமரத்துவமடைந்த அன்னாருக்கு தனது அனுதாபத்’தை வெளியிட்டுள்ள அவர் குறித்த செய்திக் குறிப்பில் மேலும் கூறுகையில் –
ஈழத் தமிழர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய சிந்தனை பொறியை தோற்றுவித்தவர்களுள் ஒருவர் இன்று சிந்தனையை நிறுத்தி இருக்கின்றார்.
யாழ்ப்பாணம் தமிழாராட்சி மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனம் புஸ்பராணியின் மனதினுள் குமுறிக்கொண்டிருந்த இன உணர்வுக்கும் தமிழ் பற்றிற்கும் எண்ணெய் ஊற்றியது எனலாம்.
யாழ். கோட்டையின் ராணி மாளிகையில் அன்று செயற்பட்ட வதை முகாமில் நாம் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது சுவரின் மறுபுறத்தில் அடைக்கப்பட்டிருந்த புஸ்பராணி பொலிஸாரின் அட்டூழியம் தாங்காமல் எழுப்பிய ஓலக் குரல் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகள் மண்ணையும் உறவுகளையும் பிரிந்திருந்தாலும் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்பதை புஸ்பராணியின் அகாலம் நூல் எமக்கு வெளிப்படுத்திநிற்கிறது.
இறுதிவரை வாசிப்பு எழுத்து என்று வாழ்ந்தவர் தனது போராட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் தனது நூலில் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைத்து சென்றிருக்கின்றார்.
அந்தவகையில் ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் தனியிடம் ஒதுக்கப்பட வேண்டிய புஸ்பராணி இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றார். அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்கள் குறிப்பாக அவரின் போராட்ட வாழ்விற்கு துணைநின்ற அவரின் சகோதரிகள் உட்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த வலிகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 695