கல்வியில் கடைமட்டத்தில் உள்ளவர்களையும் சர்வதேச ரீதியில் நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
சித்திரைப் புதுவருட பெண்களுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு நேற்றைய (2025.04.18) தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் விளையாட்டுக் கழகத் தலைவர் கிருஸ்ணபிள்ளை புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் பல தகவல் தொழிநுட்ப இலத்திரனியல் சாதனங்களின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினர் அதில் மூழ்கி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. ஆயினும் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கியமான விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவுள்ளது.
விளையாட்டின் மூலம் ஒரு வீரனது உடல், ஆற்றல், சிந்தனை உற்சாகமடைகிறது. அவனது கல்வி கடைமட்டத்தில் இருந்தாலும் கூட அவன் நட்சத்திர வீரனாக பிரகாசிக்கின்றான். எனவே வளங்கள் குறைந்த நிலையில் உள்ள எமது பகுதி விளையாட்டு கழகங்கள் விளையாட்டு ஆர்வத்தில் உள்ளமையை பார்க்கும்போது பெருமையாகவுள்ளது. அதிலும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட நிகழ்வை முதற்தடவையாக எமது பகுதி கழகங்கள் முன்னெடுத்துள்ளன. அது சிறந்த செயற்பாடுகள். இதனை ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சுpத்திரை புத்தாண்டு மகளிருக்கான கரப்பந்தாட்ட நிகழ்வில் மாமுனை கலைமகள் விளையாட்டுக்கழகமும் செம்பியன் விளையாட்டுக் கழகமும் இறுதி சுற்றுக்குத் தெரிவாகின. இறுதிப் போட்டியில் மாமுனை கலைமகள் விளையாடடுக்கழகம் வெற்றிக் கேடயத்தை கைப்பற்றியது.
- 134