Feed Item
Added a post 

நான்-இன் என்பவர் ஒரு குருவிடம் பல காலமாக சீடராக இருந்தார்.

பல காலம் கழித்து குரு சொன்னார் உனக்கு எல்லாம் நிறைவேறி விட்டது ஏறக்குறைய நீ அடைந்து விட்டாய் என்றார்.

குருவே ஏறக்குறைய என்றால் என்ன அர்த்தம்,

அதன் பொருள் என்ன என்றார் நான் -இன்?

குரு சொன்னார் நான் உன்னை இன்னொரு குருவிடம் அனுப்பி வைக்கப் போகிறேன்

இறுதியான நிறைவு பணியை அது செய்து முடிக்கும் என்றார்.

நான்-இன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்

சரி என்னை அனுப்பி வையுங்கள் என்றார்.

குரு கடிதம் ஒன்றை கொடுத்து நகரில் ஒருவரை சந்திக்கும் படி அனுப்பி வைத்தார்.

குரு அனுப்பி வைத்த ஆளை வந்து சந்தித்தார் நான்-இன்.

அவர் சந்தித்த நபர் ஒரு உணவு விடுதி நடத்துபவர்.

கடிதத்தைப் படித்துவிட்டு விடுதிகாரர் சொன்னார் உங்கள் குரு ஏன் என்னிடம் அனுப்பி வைத்தார் என்று எனக்கு தெரியாது.

நான் அந்த அளவுக்கு படித்தவன் இல்லை.

உங்களுக்கு போதிக்கும் அளவிற்கு எனக்கு எதுவும் தெரியாது.

இருந்தாலும் உங்களை இங்கு அனுமதிக்கிறேன் நீங்கள் தொடர்ந்து என்னை கவனியுங்கள் என்றார்.

நான்-இன் தொடர்ந்து மூன்று நாட்களாக விடுதிகாரரை கவனித்து வந்தார்.

அவர் காலையில் விடுதியைத் திறப்பதும் வியாபாரம் செய்வதும்

பிறகு இரவு பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு விடுதியை மூடுவதும்,

மீண்டும் காலையில் எழுந்து விடுதியை திறந்து பாத்திரங்களை கழுவுவதையும் அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக கவனித்து வந்தார்.

நான்-இன் க்கு சலித்துவிட்டது.

இதில் கவனிப்பதற்கு ஏதும் இல்லை

நீ எப்போது பார்த்தாலும் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு இருக்கிறாய்.

சாமானியமான வேலைகளையே செய்து கொண்டிருக்கிறாய்.

எனவே நான் போகிறேன் என்றார்.

விடுதிகாரர் சிரித்துவிட்டு அனுப்பி வைத்தார்.

நான் - இன் மீண்டும் தன் குருவிடம் வந்தார்.

மிகவும் கோபமாக, என்னை ஏன் அவ்வளவு தூரம் அங்கு அனுப்பி வைத்தீர்கள்.

அந்த விடுதிகாரன் ஒரு சாதாரண ஆள்.

அவன் எதுவும் எனக்கு கற்பிக்கவும் இல்லை

வெறுமனே கவனி என்று மட்டும் தான் சொன்னான்.

கவனிப்பதற்கும் அங்கு எதுவும் இல்லை என்றார்.

குரு சொன்னார் அங்கு நீ அடிக்கடி கவனித்த ஏதாவது ஒன்றை மட்டும் சொல் என்றார்.

நான் -இன் சொன்னார் அவன் தினமும் மாலையில் பாத்திரங்களை கழுவி வைக்கிறான்

மீண்டும் காலையில் அதே பாத்திரங்களை கழுவுகிறான் இதுதான் பார்த்தது என்றார்.

குரு சொன்னார் இதுவே என் போதனையும்.

உன்னை நான் அனுப்பி வைத்ததே இதைக் கவனிக்கத்தான்.

பாத்திரங்களை இரவில் அவர் கழுவி வைத்தார்.

இருந்தாலும் அந்த கழுவிய பாத்திரங்களையே காலையிலும் அவர் திரும்ப எடுத்து கழுவிக் கொண்டிருந்தார்.

இதன் பொருள் என்ன?

இரவிலும் கூட ஒன்றுமே இல்லாது இருக்கும் போது கூட அவை அழுக்காகியிருக்கின்றன.

ஓரளவு தூசு மாசு அதற்குள் படிந்துவிட்டு இருக்கிறது.

எனவே நீ தூயவனாக இருக்கலாம்.

நீ அப்பழுக்கு இல்லாதவனாக கூட இருக்கலாம்.

ஆனால் காலத்தில் ஒவ்வொரு கணமும் உன்னை தொடர்ச்சியாக தூய்மைபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

எதையுமே செய்யாமல் இருந்தாலும் கால ஓட்டத்தில் கலங்கம் அடைகிறாய்.

நான் தூய்மையானவன் என்பது கூட ஒரு ஆணவம் ஆகிவிடுகிறது.

இதுவே நான் தரும் இறுதி போதனை என்றார் குரு.

எனவே ஒவ்வொரு கணமும் புதியதாய் இருங்கள்.

  • 480