ஒரு ஊரில் இருந்த ஞானி ஒருவரை தேடி வந்தார், பெரியவர்.
அந்த ஞானியிடம், 'ஐயா, ஞானத்தில் சிறந்த ஞானம் எது?' என்று கேட்டார்.
'இன்பத்தால் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தால் சோர்வடையாமலும் இருப்பது தான் அது...' என்றார், ஞானி.
'சரி, சுவாமி... அப்படிப்பட்ட ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது?' என்றார், பெரியவர்.
'அதை, ஒரு கழுதையிடம் இருந்து, நான் கற்றேன்...' என்றார், ஞானி.
பெரியவர் ஒன்றும் புரியாமல் விழிக்க, 'நீங்க, நாளைக்கு காலையில் ஆசிரமத்துக்கு வாங்க, புரிய வைக்கிறேன்....' என்றார், ஞானி.
மறுநாள் காலை, ஆசிரமத்துக்கு வந்த பெரியவரை, 'வாங்க, வந்து இப்படி உட்காருங்க. கொஞ்ச நேரத்தில் இந்த வழியாக ஒரு கழுதை போகும். அதை கவனிங்க...' என்றார்.
பெரியவருக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஞானி சொன்னது போல் உட்கார்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த வழியாக, ஒரு கழுதை, முதுகு நிறைய அழுக்கு மூட்டைகளை சுமந்தபடி சென்றது. ஒரு சலவைத் தொழிலாளி அதை ஓட்டி கொண்டு போனார்.
கொஞ்ச துாரத்தில் இருக்கும் ஆற்றில் துணியை சலவை செய்து, மாலையில் இந்த வழியாகவே திரும்புவர்.
ஞானி கூறியது போல், அழுக்கு மூட்டையை சுமந்து சென்ற கழுதையை கவனித்தார், பெரியவர். கழுதை போனதும், ஞானியைத் திரும்பிப் பார்த்தார்.
'சாயந்தரம் வரைக்கும் நீங்க இங்கேயே இருக்கணும்...' என, ஞானி கூற, பெரியவரும் இருந்தார்.
சாயந்தரம் ஆனதும், 'ஐயா, இப்ப கொஞ்ச நேரத்தில் அந்த கழுதை இந்த வழியாக திரும்பி வரும். அதையும் கவனிங்க...' என்றார், ஞானி.
பெரியவரும் கவனித்து கொண்டிருந்தார். கழுதை வந்தது. அதன் முதுகில் சலவை செய்யப்பட்ட துணி மூட்டையை சுமந்து சென்றது.
பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை; பொறுமை இழந்து, 'சரி சுவாமி, இந்த கழுதைக்கும், உங்க ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்றார்.
'ஐயா, இந்த கழுதை தினமும் காலையில், அழுக்கு மூட்டைகளை சுமந்து ஆற்றுக்கு போகிறது. மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து திரும்பி ஊருக்கு போகிறது.
'காலையிலே இது போகும் போது, முதுகில் அழுக்கு மூட்டைகளை சுமந்து போகிறோம் என்ற வருத்தம் இல்லை. அதேபோல், சாயந்திரம் திரும்பி வரும் போது, சுத்தமான துணிகளை சுமந்து வருகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதைப் பார்த்துத் தான் நானும், அது மாதிரி, ஞானத்தை கற்றுக் கொண்டேன்...' எனக் கூறி முடித்தார், ஞானி.
அதனால், யார் கற்றுக் கொடுத்தனர் என்பதை விட, எதைக் கற்றனர் என்பது தான் முக்கியம்.
- 479