தூங்கும் முறையும், தூங்கும் நேரத்தையும் வைத்து தான் ஒருவர் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறார் என சொல்ல முடியும். ஒருவர் சரியான நேரத்திற்கு சரியான முறையில் தூங்குகிறார் என்றால் கண்டிப்பாக அவர் உடல் ஆரோக்கியத்திலும், மனநலத்திலும் சிறந்தவராக இருப்பார்.
அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த தூங்கும் முறை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பதை பார்க்கலாம். பொதுவாக தூங்கும் முறை பல்வேறு விதங்களில் இருந்தாலும், அதிகமாக தூங்குபவர்கள் ஒருக்களித்தும் அல்லது மல்லாக்க படுத்தும் அல்லது குப்புறப்படுத்தும் தூங்குவார்கள்.
ஒரு சிலர் உடலை சுருக்கிக் கொண்டும், காலை அகட்டிக் கொண்டும் அல்லது படுக்கையில் இருந்து காலை தொங்கவிட்டபடியும் தூங்குவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான முறையில் தூங்குவது வழக்கம். வலது புறம் ஒருக்களித்து படுக்கும் போது சீரான ஆக்சிஜன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம், இதனால் உடல் வேகமாக குளிர்ந்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாய்வு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.
குப்புறப்படுத்து தூங்கும் பொழுது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் உண்டாகும், இதனால் இரைப்பை தன் வேலையை சரியாக செய்யாது. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும். மல்லாக்க படுத்து கொண்டு கால்களை அகற்றி வைத்து படுப்பவர்களுக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்படும், இதனால் குறட்டை தொந்தரவும் உண்டாகிறது.
கால்களை தொங்க விட்டபடி அல்லது உடலை சுருக்கிக் கொண்டு தூங்குபவர்களுக்கு மேற்கூறிய எல்லா பிரச்சனைகளும் ஏற்படும். சரியான முறையில் தூங்காமல் போவதால் தான் எழுந்ததும் சிலருக்கு சுறுசுறுப்பு இல்லாமல், உடல் முழுவதும் வலி இருப்பது போல உணர்வு இருக்கும். வெறும் தரையில் படுப்பது, தலையணை இல்லாமல் படுப்பது போன்றவற்றையும் செய்யக் கூடாது. இவர்களுக்கு கழுத்து சுளுக்கு, முதுகு பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் தசைப்பிடிப்பு, முதுகு தண்டுவடத்தில் வலி போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.
ஒரு மனிதன் சரியான முறையில் தூங்குவது என்பது நேராக மல்லாக்கப்படுத்து தூங்கும் பொழுது கால்கள் ஒட்டியபடி, கைகள் உடம்பின் மீது வைத்து நல்ல தலையணையின் மீது சரியாக தலையை வைத்து படுத்து உறங்க வேண்டும். இப்படி உறங்கும் பொழுது உடலில் ஆக்சிஜன் சரியாக சென்றடையும். இதனால் ரத்த ஓட்டமும் உடலில் சீராக வேலை செய்து உள்ளுறுப்புகளை பாதுகாக்கும்.
ஒருக்களித்து படுக்கும் பொழுது இடது புறம் திரும்பி படுக்க வேண்டும். கால்களை நீட்டியபடி, இரு கைகளையும் தலைக்கு அருகில் வைத்து கொண்டு படுக்கலாம். கால்களுக்கு அருகில் தலையணை வைத்து வலது காலை மட்டும் தூக்கி தலையணை மீது வைத்தும் படுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு பிராணவாயு முழுமையாக கிடைக்கும். உள்ளுறுப்புகள் சரியாக வேலை செய்யும். காலையில் எழுந்திருக்கும் பொழுது உடல் வலி இல்லாமல், சுறுசுறுப்பாக உடம்பு வேலை செய்யும்.
தூங்கும் பொழுது நம்முடைய உடல் தன்னை தானே சீர் செய்து கொள்ளும். இது ஒரு மெக்கானிசம் போன்ற அமைப்புதான். இரவு நேரத்தில் மூளைக்கும், கண்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். ஒலி மற்றும் ஒளி போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். மனதை லேசாக்கி, உடல் உள் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை பாய செய்து, முழுமையான ஆக்சிஜனை கொடுத்து, ஒவ்வொரு நாளையும் புத்தம் புதியதாக உங்களுக்கு கொடுக்க சரியான முறையில் தூங்கி பழகுங்கள்.
- 272