Feed Item
·
Added a post

ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நமக்கு ஏழரை சனி நடக்கிறது என்பதை, ஏழரை சனி நடப்பவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த ஏழரை சனி கெடுதலை செய்யும் என்றும், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தரும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்குமே ஏழரை சனி ஒரே போல் தான் செயல்படுமா ? என கேட்டால், இல்லை! என்பது தான் பதில்.

ஏழரை சனி நிச்சயம் வயதுகளுக்கு ஏற்ப கெடு பலன்களை அதிகமாகவும், குறைவாகவும் செய்யும்.

ஒரு ராசியின் மீதும், அந்த ராசியின் முன் பின் ராசிகளிலும் சனி பகவான் செல்லும் காலகட்டம் ஏழரை சனி என சொல்லப்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைவருக்கும் வரும் தான் என்றாலும், பிறந்த பிறகு முதல் முதலில் வரும் ஏழரை சனியே மங்கு சனி என சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை 30 ஆண்டுகள் கழித்து வரும் சனியை பொங்கு சனி என சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை வரக்கூடிய ஏழரை சனிக்கு மரண சனி என பெயரிடப்பட்டுள்ளது.

மங்கு சனி என்பது கடுமையான பலன்களை கொண்டிருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களையும், பல புரிதல்களையும் ஏற்படுத்துவதற்காக, இளமை பருவத்தில் முதலில் வரும் இந்த சனி பல அனுபவங்களை கொடுத்து வாழ்வை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக பல சிக்கல்களை உண்டு பண்ணும்.

இதுவே இரண்டாவது சுற்றாக சொல்லப்படும் பொங்கு சனியை பொருத்தவரை, சில பின்னடைவுகளை தந்த போதிலும் நல்ல முன்னேற்றங்களையும், வாழ்க்கையில் ஏற்றங்களையும் ஏற்படுத்தும்.

எனில் மரண சனி என்பது மரணத்தை ஏற்படுத்துமா? என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உண்மையில் மரணத்தை ஏற்படுத்தும் என்பதற்காக மரண சனி என்று பெயரிடப்படவில்லை. சனி பகவானின் காரகம் ஆயுளை தருவது தானே! தவிர, மரணத்தை தருவது அல்ல. மரண சனியின் சரியான பெயர் அந்திம சனி. உங்களுடைய வயதான காலத்தில் வரும் ஏழரை சனி என்று பொருள். இதுவும் சற்று கடுமையாக இருக்கும். மங்கு சனியை விட சற்று பரவாயில்லை என்னும் அளவில் இருக்கும், பொங்கு சனியை விட சற்று சிரமங்கள் கூடுதலாக இருக்கும்.

ஒற்றைப்படைகளான முதல் சுற்றும், மூன்றாம் சுற்றும் சிரமங்களை தரும் என்றும், இரட்டைப்படைகளான இரண்டாம் சுற்று மற்றும் நான்காம் சுற்று ஏழரை சனி பிரச்சனைகள் தராது என்ற கருத்தும் ஜோதிடத்தில் உண்டு.

பொதுவாக இதுபோல் சொல்லப்பட்டிருந்தாலும், இதில் நிறைய ஜோதிட நுட்பங்கள் உண்டு. அந்த நுட்பங்களை இப்போது பார்ப்போம். சிலருக்கு பிறக்கும் போதோ அல்லது சிறுபிள்ளையாக இருக்கும் போது முதல் ஏழரை சனி கடந்திருக்கும், இவற்றையெல்லாம் முதல் சுற்று ஏழரை சனி என கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஆணோ, பெண்ணோ பருவ வயதை அடைந்த பிறகு தான் ஏழரை சனியின் பலன்கள் தெரியவே தொடங்கும். ஆகவே வாழ்வில் 45 வயது களுக்குள் வரும் ஏழரை சனி என்பது முதல் சுற்று ஏழரை சனியாக மங்கு சனியாகவே செயலாற்றும். ஒரு 50 வயதை கடந்தவர்களுக்கு எல்லாம் ஏழரை சனி பொங்கு சனியை போன்றே செயல்படுகிறது. நன்கு வயதான பிறகு வரும் ஏழரை சனி உடல்நிலை ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்தி, மனச்சோர்வை ஏற்படுத்தி பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது.

பெரும்பாலும் பருவ வயதில் இளைய பருவத்தில் வரும் ஏழரை சனியே வாழ்க்கையில் பல கடினமான சூழல்களை உருவாக்கி தெளிவான புரிதல்களை தந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை நீங்கள் உலகத்தைப் பற்றிய புரிதலுடன் வாழ்வதற்கு உங்களை பக்குவப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுவாக ஏழரை சனி என்று இல்லாமல் உங்களுக்கு தற்சமயம் எந்த சனி நடக்கிறது ? மங்கு சனி நடக்கிறதா ? பொங்கு சனி நடக்கிறதா ? அந்திம சனி நடக்கிறதா ? என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

  • 1481