10 அணிகள் பங்கேற்கும் 9 ஆவது ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (03) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமாகிறது.
பங்களாதேஷில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த குறித்த தொடர் அங்கு நிலவிய போராட்டம் காரணமாக பாதுகாப்பின்மையால் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டது. அதன் படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இரண்டு இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை போட்டிள் நடைபெறவுள்ளன. கடந்த மகளிர் T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக சம்பியன் பட்டம் பெற்றது.
2024 T20 உலகக்கிண்ண தொடரில்,
குழு A யில் – அவுஸ்திரேலியா இந்தியா நியூசிலாந்து பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகளும்,
குழு B யில் தொடரில் அணிகளாக - பங்களாதேஷ் தென்னாபிரிக்கா மே.தீவுகள் ஸ்கொட்லாந்து இங்கிலாந்து ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.
இதேவேளை மகளிர் T20 உலகக் கிண்ணத்தை அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. இதுவரையில் 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் T20 உலகக்கிண்ண தொடரில் 6 முறை சம்பியன் பட்டம் வென்று அவுஸ்திரேலியா அசத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
எனினும் இந்த முறை தொடரில் ஆசிய சம்பியன்களான இலங்கை மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக்கிண்ண தொடரை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள பல வீராங்கனைகள் உலகக்கிண்ண அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் டொலரும், ரன்னர்-அப் (இறுதிப்போட்டியில் தோல்வியடையும்) அணிக்கு 1.17 மில்லியன் டொலரும், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு 6 இலட்சத்து 75 ஆயிரம் டொலரும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாளில் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் - ஸ்கொட்லாந்து அணிகள் மோதுகின்றன.
இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இறுதியாக ஆசியக்கிண்ண அரையிறுதியில் மோதியதில் இலங்கை அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் - சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, இனோகா ரணவீர, ஷஷினி கிம்ஹானி, அமா கான்சனா, சுகந்திகா குமாரி ஆகியோர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது
00
- 983