Feed Item
Added a post 

கணவன் ,மனைவி ஒரே ஒரு குழந்தை என்றிருக்கும் அழகான வீட்டிற்கு தந்தை வழி தாத்தா வருகிறார். பேரனுடன் தங்கி இருந்து தன் நாட்களை கழிக்க ஆசைக் கொண்ட அவருக்கு கண்கள் சரியாக தெரியவில்லை. கைகளும் பொருட்களை எடுக்கையில் நடுக்கம் கொள்கிறது. அந்த அளவுக்கு முதுமையின் தாக்கத்துடன் இருக்கிறார்.

வீட்டில் எல்லாரும் ஒன்றாக மேசையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். தாத்தா கரண்டியை எடுக்கையில் கீழே தவறி விழுகிறது. பால் குடிக்க கோப்பையை பிடிக்கையில் கை நடுக்கத்தில் பால் மேசை விரிப்பில் சிந்தி விடுகிறது. அவர் உணவு உண்ணும் போதும் உணவும் கீழே சிந்துகிறது.

அவரின் இந்த செயல்களைக் கண்டு கணவனும் மனைவியும் எரிச்சல் அடைகின்றனர். தொடர்ந்து தாத்தாவை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்கள் மேசையில் அமர வைக்காமல் ஓரமாய் அவருக்கென்று ஒரு தனி மேசையில் சாப்பிட வைத்தனர். அவர் சாப்பிடும் பாத்திரம் கீழே விழுந்து உடையாமல் இருக்க மரத்தால் ஆன பாத்திரங்களில் உணவு கொடுக்கப்பட்டது.

நடக்கும் அத்தனை விடயங்களையும் பேரன் அமைதியாய் பார்த்துக் கொண்டே இருக்கிறான். எல்லாரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிட தாத்தா மட்டும் தனி மேசையில் சாப்பிடுகிறார். ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிகிறது. மகன் மற்றும் பேரனை அடிக்கடி திரும்பி பார்த்த படியே சாப்பிடுகிறார்.

ஒரு நாள் அந்த வீட்டு குழந்தை( தாத்தாவின் பேரன்)

மரத் துண்டுகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை பார்த்த தந்தை மகனிடம் அன்பாய் கேட்கிறார், " குட்டி என்ன விளையாடுறிங்க?" என்று.

குழந்தை சொல்கிறது " நான் இந்த மரத்துண்டுகளை வைத்து 2 பாத்திரங்கள் செய்கிறேன் பா .நான் பெரியவன் ஆனதும் உங்களுக்கும் அம்மாவுக்கும் சாப்பிட கொடுக்க வேண்டுமல்ல அதற்குத் தான்" என்று.

தந்தையால் பேச முடியவில்லை. கண்கள் கண்ணீரில் ததும்பியது. தான் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.குற்ற உணர்ச்சி அவரை கொன்றது.

மறுநாளிலிருந்து , தாத்தாவுக்கும் அவர்கள் அமரும் மேசையிலே உணவு பரிமாறப் பட்டது .பக்கத்திலேயே நின்று தாத்தா சாப்பிடும் வரை அவரை கவனித்துக் கொண்டார்கள்.கரண்டிகள் கீழே விழுந்ததும் எடுத்து வைத்துவிட்டு புன்னைகைத்தார்கள்.பால் சிந்தியதும் மேசை விரிப்பை மாற்றிவிட்டார்கள்.

நீதி: குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பது தவறு.நம்மை விட அவர்கள் பார்வை கூர்மையானது.அவர்கள் கண்கள் பார்க்கும் ஒவ்வொரு செயலுக்கும் மனதில் ஒரு தகவல் பதிவிக்கப்படுகிறது. இதை நினைவில் கொண்டு உங்கள் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.

  • 500