Feed Item
·
Added a news

நீதிபதிகள் சிலரது முறையற்ற செயற்பாடுகளால் கௌரவமான பல நீதிபதிகளின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நீதிச்சேவை கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபையில் தாம், ஆற்றிய உரை தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டுள்ள இரு நீதிபதிகளை அவசியமானால் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைத்து விசாரிக்க முடியும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலையே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் -

நீதிச்சேவை கட்டமைப்பு தொடர்பில் சபையில் நான் ஆற்றிய உரை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். எனினும், நான் கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழு அதற்குப் பதிலளித்துள்ளமை மகிழ்ச்சியானது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடந்த மாதம் 19 இல், நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது நான், பல விடயங்களை சபையில் குறிப்பிட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிச் சேவைகள் சம்பந்தமாக நீதிமன்றத்திடம் கேட்க முடியாத விடயங்களை, நீதியமைச்சரான என்னிடமே கேட்கின்றனர். நான் அவற்றுக்குப் பதிலளித்துள்ளேன்.

கல்கிசை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பெறப்பட்டுள்ளது. இந்நீதிபதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் நான், வலியுறுத்தினேன். ஆனால் இது தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 20 கோடி பெறுமதியான விஸ்கி போத்தல்கள் காணாமலாகியிருந்தன. இது தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நீதிமன்றத்தின் களஞ்சியசாலையின் கதவின் பூட்டை உடைத்து போத்தல்கள் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. எனினும் பூட்டுக்கான வழமையான திறப்பினைக் கொண்டே கதவு திறக்கப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். விஸ்கி போத்தல்கள் திருடப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் முயற்சிப்பதாக, ஆணைக்குழுவின் பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்விடயத்தை நான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய பின்னர் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஹெரோயின்,கஞ்சா ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பில் குறிப்பிடப்பட்டது.

அபாயகரமான போதைப்பொருட்களுக்கு 1000 ரூபா தண்டப்பணம் அல்லது பிற்பகல் 2 மணி அல்லது 3 மணிக்குப் பின்னர் விடுதலை என்ற நிலையே காணப்பட்டது என்றும் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 477