Feed Item
·
Added a news

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அத்துடன்இந்த உடன்படிக்கைகளின் படி செயற்படப் போகிறார்களா இல்லையா என்பதை ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளா ர். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

இதுவரை பல்வேறு தரப்பினரும் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி, அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், உள்ளிட்ட அரசாங்க சபைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எத்தனை தேவைகள் இருந்தாலும் 2024 வரவு செலவுத்திட்ட ஆவணத்தின் மூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியாது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஒரு அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களை மேற்கொள்வதற்குப் போதுமான வருமானம் இருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

2023ஆம் ஆண்டு அனைத்து வகையான வரிகளையும் அதிகரித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1550 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகள் மூலம் சுங்கத் திணைக்களம் 923 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.

மதுவரித் திணைக்களம் 169 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் 20 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதுடன், வரி அல்லாத வருமானம் 219 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

அத்துடன் 16 பில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைத்துள்ளது. பல்வேறு வைப்பு நிதிகள் மூலம் 304 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வழிகளிலும் பெறப்பட்ட மொத்த வருமானம் 3201 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருமானங்கள் மூலம் அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகள், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும போன்ற நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி என்பவற்றைச் செலுத்த வேண்டும். அதற்காக 2023ஆம் ஆண்டில் மட்டும் 4.3 டிரில்லியன் ரூபா செலவாகியுள்ளன.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 வரை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தங்களைப் பேண வேண்டும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது.  கடந்த வருட அனுபவத்தின்படி அதற்கு 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளது.

அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ள உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர்கள் செயற்படுவார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காத எந்த ஒருவருக்கும் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதைக் கூற வேண்டும்” என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

  • 790