Feed Item

தமிழ்நாட்டில் - திருவாரூரில் மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ள கமலாலய திருக்குளத்தின் நடுவே நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த நாகநாதர் திருக்கோயில் நடு கோயில், நடுவன் கோயில், நடுவான் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. குளத்தின் கரையில் இருந்து பார்க்கும்போது இந்த கோயில் மிக சின்னதாக தெரியும்.

திருக்கடல் போன்று திகழும் கமலாலயக் குளத்தின் நடுவே நடுவாண் கோயில் அமைந்துள்ளது. நடுவனக் கோயில், நடுவணாங் கோயில், நடுக்கோயில், நாகநாத சுவாமி கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ‌இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீநாகநாதரும் ஶ்ரீயோகாம்பாளும் யோகக் கலைகள் ஸித்திக்க வரம் தரும் தெய்வங்களாகத் திகழ்கிறார்கள்.

கரையில் இருந்து பார்த்தால் சிறியதாகத் தோன்றும் கோயில், அருகில் நெருங்கினால் பிரமிக்க வைக்கிறது. குளத்தின் நடுவே சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது; இரண்டு திருச் சுற்றுக்களைக் கொண்டது. மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலில் உள்ள சுதைச் சிற்பத்தில் முசுகுந்த சக்கரவர்த்தி இறைவனை பூஜிக்கும் காட்சியைக் காணலாம். விநாயகர், ஜேஷ்டாதேவி, நாகர், சண்டிகேஷ்வரர், நந்தி, அவருக்கு அருகில் ஓர் சிவலிங்க மூர்த்தி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

நாகநாதர் கோயிலைச் சுற்றிலும் 16 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு நடுவே அமைந்த ஆலயம் என்பதாலும் இது நடுக்கோயில் எனப் பெயர்பெற்றது என்பர்.

இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். இக்கோயில் நுழைவுப் பகுதியில் யானை சிலை ஒன்று உள்ளது. கனமழை பொழியும் காலங்களில் கமலாலய குளத்தின் நீர்மட்டம், இந்த யானையின் கால்களைத் தொடுவிட்டால் மழை நின்றுவிடும் என்பது நம்பிக்கை.

‘அஞ்சனை வேலியாரூ ராதரித் திடங்கொண்டார்’ எனும் திருநாவுக்கரசரின் பதிக வரிகள் இக்கோயிலின் மேன்மையைச் சொல்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஐந்து பிரதோஷங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று, அபிஷேகத் தயிரை வாங்கி அருந்தினால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ காலம் மட்டுமன்றி சோமவாரம், சிவராத்திரி, திருவாதிரை போன்ற சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய தினங்களில் இந்த ஆலய இறைவனையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்; வியாபாரம் பெருகும்.

இந்தக் கோயிலுக்குப் படகில்தான் செல்ல முடியும். குளத்தின் வடகரையிலிருந்து படகு மூலம் அர்ச்சகர் சென்று வருவார்.

தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ தினங்களில் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிவராத்திரி அன்று, இங்கு நான்கு கால பூஜை நடைபெறும்.

  • 535