Feed Item
Added article 

1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வறுமையால் வெல்லப்பட்டார். ஆழ்கடலில் முத்திருக்க, அலைகளால் கரையில் கொண்டு சேர்க்கப்படும் சாதாரண சிப்பியாக ஒதுங்கினார் மகாலிங்கம். எல்லாவற்றையும் இழந்தது மகாலிங்கம் என்ற தயாரிப்பாளர்தான்.

இசைக்கலைஞன் அல்லவே. கீழே விழுந்த மகாலிங்கத்தைத் தூக்கி நிறுத்தினார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் தான் சொந்தமாகத் தயாரித்த முதல் படமான 'மாலையிட்ட மங்கை'யில் துணிந்து மகாலிங்கத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். 'செந்தமிழ் தேன்மொழியாள்' இன்றுவரை செந்தமிழைப் போல ரசிகர்களின் நெஞ்சில் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உச்சஸ்தாயிலேயே பாடி பழக்கப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை மென்மையான குரலில் பாடவைக்க முடியுமா? உயரமாய் பறக்கும் பருந்தை செல்லமாக குழையும் சிட்டுக்குருவியாக்க முடியுமா? ஆனால், மென்மையான பாடலைப் பாடவைத்து, தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கிக் காட்டினார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. மாலையிட்ட மங்கையில் வரும் 'நானன்றி யார் வருவார்?' பாடல் மென்மையின் மேன்மையைச் சொல்லும்.

சந்தத்திலிருந்து பிசகாமல் கவிமணம் வீசும் கண்ணதாசனின் பாடல் வரிகள், பழைமையின் பக்குவத்தை மீறாத விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள், உச்சஸ்தாயில் ஊர்வலம் போகும் மகாலிங்கத்தின் மயக்கம் தரும் குரல். இவைதான், மாலையிட்ட மங்கையை மங்களகரமாக மாற்றியது. 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடலும் மிகப் பிரபலம்.

'மாலையிட்ட மங்கை' மகாலிங்கத்தின் கழுத்தில் மாலையிட்ட மங்கையானது. படம் அமோக வெற்றி. சரிவில் இருந்து மீண்டார் டி.ஆர்.மகாலிங்கம். 1959-ம் ஆண்டு வெளியான 'அமுதவல்லி', பாடல்களின் இன்பவல்லி. பட்டுக்கோட்டை என்ற தமிழர்களின் பாட்டுக்கோட்டையோடு விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான மெட்டில் ஆடை கட்டிக் கொண்டது நிலவு. அமுதவல்லியின் 'ஆடைகட்டி வந்த நிலவோ' பாடலை ரசிக்காதவர்கள் யார்?

1960-ம் ஆண்டு - எழுத்தாளர் எல்லார்வி எழுதிய ''கலீர் கலீர்'' நாவல்தான் 'ஆடவந்த தெய்வம்' ஆனது. முக்கோணக் காதல் கதை. டி.ஆர்.மகாலிங்கத்தோடு ஈ.வி.சரோஜா, அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். சாஸ்திரிய சங்கீத காதலர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த மகாலிங்கம், இந்தப் படத்தில் சாதாரண மக்களுக்கும், சங்கீத சாதம் பரிமாறியிருப்பார். அவர்களது குரலில் தன்னை உருமாற்றியிருப்பார். 'மழை கொட்டு கொட்டு கொட்டுது பாரு இங்கே' பாடல் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் சோசலிசத்தையும் சொல்லியது.

'ரத்தினபுரி இளவரசி'யில், காதலுக்கு நாலு கண்கள், கவலையில்லாத மனிதனில், நான் தெய்வமா? இல்லை நீ தெய்வமா? என மகாலிங்கம் நடித்த படங்களில் ஓரிரு பாடல்கள் வெற்றியடைந்தாலும், படங்கள் தோல்வியைத் தழுவின.

1960-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, அந்தி வானத்து ஆதவன் போல டி.ஆர்.மகாலிங்கத்தின் கலையுலக வாழ்வு அஸ்தமனத்திற்கு அடிகோலத் தொடங்கியது. ஆனால், 1965-ல் A.P. நாகராஜனின் 'திருவிளையாடல்' டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத் திரும்பிய திசையெல்லாம் மீண்டும் ஒலிக்கச் செய்தது. இசைத்தமிழை அவர் இசைத்தது, இன்றுவரை அருஞ்சாதனையாக ரசிகர்கள் மனதில் அகலாமல் இருக்கிறது.

  • 280